நாடு முழுவதும் 57 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாகின்றன. அதற்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, தமிழகத்தில் 6 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாகின்றன. அவற்றில் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக-வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க-வுக்கு 2 இடங்களும் கிடைத்தன. தி.மு.க சார்பில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓர் இடம் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியநிலையில் அதிமுக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வில் பெரிய களபேரமே நடைபெற்று வருகிறது. அதேபோல, அ.தி.மு.க-விலும் 2 இடங்களுக்கான வேட்பாளர் தேர்வில் கடுமையான இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பார்காத வகையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஆர்.தர்மரும், ஈபிஎஸ் ஆதவாளர் சி.வி.சண்முகத்தின் பெயர்களை அதிமுக அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு அறிவித்தது.
ராஜ்ய சபா வேட்பாளர்களை தேர்வு செய்ய ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் வழிகாட்டுதல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை (19-ம் தேதி) நடைபெற்றது. முன்னதாக, இருக்கும் 2 சீட்களில் ஒன்று ஓபிஎஸுக்கும், மற்றொன்று இபிஎஸுக்கும் என முடிவு செய்யப்பட்டதாம்.
அதன்படி, ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் உள்ள சில தலைகளின் பெயர்களை முன்வைத்தார். அதில், தேனி மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான சையது கான், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்டோர் பெயரை முன்வைக்கப்பட்டது. ஆனால், சையது கான் ஏற்கனவே எம்.பியாக இருந்துவிட்டார். அதேபோல, சமீபத்தில் சசிகலா, தினகரனைக் கட்சியில் இணைக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அவருக்கு தற்போது சீட் கொடுத்தால், கட்சிக்குள் பெரிய பிரச்னை ஏற்படும் என்று வழிகாட்டுதல் குழுவினர் மறுத்துவிட்டனர்.
அதேபோல, தச்சை கணேசராஜா-வுக்கு அனுபவம் பத்தாது என்று ஒரே வார்த்தையில் மறுக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே, 2 சீட்களையும் தானே தேர்வு செய்ய இ.பி.எஸ் முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. ஆனால், ஓ.பி.எஸ் ஒரு சீட் தனக்காது என்று உறுதியாக இருந்தார். அதன்படி, தனது நீண்ட நாள் விசுவாசியாக இருந்து, தர்மயுத்த காலத்தில் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பதவி காலியான ஆர்.தர்மர் பெயரை ஓ.பி.எஸ் முன்மொழிந்துள்ளார். இதற்கு வழிகாட்டுதல் குழுவில் முதலில் எதிர்ப்பு இருந்துள்ளது. ஆனால், இதுதான் எனது இறுதி முடிவு என்று ஓ.பி.எஸ் கறாராக இருந்துவிட்டார்.
அம்மாவே தர்மருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளார். அதேபோல, பி.ஏ பட்டதாரியாகவும் இருப்பதால், ராஜ்ய சபா விவகாரங்களைப் புரிந்து கொள்வார். மேலும், தற்போது அவருக்குக் கட்சிக்குள் பெரிய பதவி ஏதும் இல்லை. இந்நிலையில், அவருக்கு சீட் கொடுத்தால், அம்மா பாணியில் தொண்டருக்கு சீட் கொடுக்கப்பட்டது என்ற நல்ல இமெஜ் கிடைக்கும் என்று அவரது பெயருக்கு வழிகாட்டுதல் குழு ஓகே செய்யப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதேபோல, செம்மலையைக் கடைக்கண் பார்வையில் வைத்திருந்தார் எடப்பாடி. இந்த எம்.பி சீட் உங்களுக்குதான் என்று வாக்கும் கொடுத்திருந்தாராம். ஆனால், சி.வி.சண்முகமும், ஜெயக்குமாரும் தங்களுக்கு சீட் வேண்டும் என்று விடாப்பிடியா இருந்துள்ளனர். இரண்டு பேரும் அமைச்சர்களாக இருந்து, தற்போது எம்.எல்.ஏ-வாக கூட இல்லை. 2 பேரும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சிக்கத் தயக்கம் காட்டாதவர்கள்.
எனவே, இதில் யார் பெஸ்ட் என தேர்வு செய்ய முடியாமல், எடப்பாடி குழப்பத்தில் உச்சநிலைக்கே சென்றுள்ளார். இதற்கிடையே, சி.வி.சண்முகம் தனக்குச் சீட்டை விட்டுக் கொடுக்க ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளார். இதனால், கட்சியில் பெரிய போஸ்ட்டாக போட்டுக் கொடுத்தால், ராஜ்ய சபா சீட் வேண்டாம் என்று ஜெயக்குமார் எடப்பாடியிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல, சி.வி.சண்முகத்துக்கு சீட் கொடுத்தால் வட தமிழகத்தில் உள்ள வன்னியர் ஓட்டுகளைக் கவர வாய்ப்பு கிடைக்கும். எனவே அவருக்கு வழங்கலாம் என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக எடப்பாடியின் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அதேபோல, அ.தி.மு.க.வின் தற்காலிக அவைத்தலைவராக இருக்கும் தமிழ் மகன் உசேனுக்கு, பதிலாக, ஜெயக்குமாரைப் பதவியேற்ற எடப்பாடி முடிவு செய்துள்ளதாகவும் தகவல். அதன்படி, பொதுக்குழுவுக்கு முன்பாக அவைத்தலைவராக ஜெயக்குமார் வாய்ப்புள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.