சென்னை: “வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக வாழுங்கள்” என்று பாரதிதாசன் கூற்றை மேற்கோள்காட்டி மணமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்தார்.
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9 ஜோடிகளின் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 33 வகையான இலவச சீர்வரிசைப் பொருட்களை மணமக்களுக்கு வழங்கினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு திமுக சார்பில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பங்கேற்ற முதல்வார் மணமக்களுக்கு மாலை மற்றும் தாலி எடுத்து கொடுத்து மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார்.
9 ஜோடிகளுக்கும் அவர்களது சமூக முறைக்கு ஏற்ப குடும்பத்தினர் கேட்டுக் கொண்டபடி தாலிச்சரடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,” நான் முதல் முறை கொளத்தூர் சட்ட மன்ற உறுப்பினராகி ஆய்வு நடத்தியபோது இந்த மண்டபம் சமூக விரோதிகளால் பாழடைந்து கிடந்தது. காமராசரால் 1966 ம் ஆண்டு இந்த மண்டபம் திறக்கப்பட்டது. நான் இந்த மண்டபத்தை சீர் செய்ய கூடாது என அரசியல் காழ்ப்புணர்வால் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
கழக வழக்கறிஞர்கள் மூலம் தீர்ப்பு பெற்று குளிர்சாதனம், லிப்ட் , பார்க்கிங் வசதியுடன் முழுமையாக மண்டபத்தை கட்டி முடித்துள்ளோம். 700 பேர் வரை மண்டபத்தில் அமர முடியும். சீரமைத்த பிறகும் காமராசர் பெயரிலேயே இந்த மண்டபம் இருக்கிறது. அவர் திறந்து வைத்ததற்கான கல்வெட்டும் அப்படியே இருக்கிறது.
அரசியல் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் காமராசரை மதிப்பவன் நான். என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினார் காமராசர் . கருணாநிதி என் திருமண அழைப்பிதழை காமராசரிடம் கொடுத்தபோது ஸ்டாலின் சுறுசுறுப்பான இளைஞராக இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். அவரது திருமணத்திற்கு நேரில் வர ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு உடல் நலம் இல்லையே என்றார் . உடனே கருணாநிதி , நீங்கள் வருவதாக இருந்தால் திருமண மண்டபத்தையே மாற்ற தயாராக இருக்கிறேன் என்றார்.
அதன்படி காமராசரின் கார் மணமேடைவரை வருவதற்கு ஏற்றவாறு , ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட மண்டபத்தில் இல்லாமல், மாற்று மண்டபத்தில் எனக்கு திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார். பாரதிதாசன் கூறியபடி வீட்டிற்கு விளக்காக , நாட்டிற்கு தொண்டராக வாழுங்கள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.