கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்கு வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை வில்லிவாக்கத்தை இளஞ்செழியன் (55) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தனது நண்பர் ராமமூர்த்தி என்பவருடன் சென்னையில் இருந்து கோவை வந்த அவர் செவ்வாய்க்கிழமை இரவு கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க இரவு மலை ஏறி, 7 ஆவது மலையில் உள்ள சுயம்புலிங்க ஆண்டவரை தரிசனம் செய்து விட்டு, மீண்டும் காலை 9 மணிக்கு கீழே இறங்க தொடங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது 6ஆவது மலையில் வந்த போது, தனக்கு உடல் நலம் சரியில்லை என தனது நண்பரிடம் கூறிய இளஞ்செழியன் மெதுவாக மலை இறங்கி வந்துள்ளார். பின்னர், மாலை 5 ஆவது மலை அருகே வந்த போது அவர் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. அங்கு மலையேற்றத்திற்காக வந்த மருத்துவர் ஒருவர் அவரை சோதனை செய்த போது அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அங்கிருந்தவர்கள் ஆலாந்துறை போலீஸ் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, இளஞ்செழியன் உடல் அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனைகாக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கறிஞரின் உயிரிழப்பு தொடர்பாக தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: சென்னை பாஜக நிர்வாகி கொலை வழக்கு – 4 பேர் எடப்பாடியில் கைது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM