விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது நெய்குப்பி கிராமம். இந்த கிராமத்தில் இயங்கிவரும் அங்கன்வாடி மையத்தில், இன்றைய தினம் சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த முகாம் நடத்தப்பட்டுள்ளது. எனவே, சிறுவர் – சிறுமிகளுடன் பெற்றோர்கள் சிலரும் அங்கன்வாடி மையத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில், வழக்கம் போல குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு கஞ்சியை அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகள் மற்றும் அவர்கள் தாய்மார்களுக்கு வழங்கியுள்ளனர். இந்த சத்துமாவு கஞ்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு குழந்தை, தான் அருந்தும் கஞ்சியில் ஏதோ ஒன்று கிடப்பதாக தன் பெற்றோரிடத்தில் கூறியுள்ளது. அப்போதுதான், சத்துமாவு கஞ்சியில் பல்லி இறந்து கிடந்தது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், அரசு ஊழியர்களும்… யாருக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அந்த கஞ்சியை உட்கொண்ட 14 குழந்தைகள், 15 பெற்றோர்கள் உட்பட 34 பேரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்துள்ளனர். அனைவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களுக்கு மருந்து வழங்கி கண்காணித்து வந்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திண்டிவனம் துணை ஆட்சியர் அமித் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவகுமார், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோரும் தனித்தனியே குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறி சென்றுள்ளனர்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துமாவு கஞ்சியில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.