அண்ணியின் பெற்றோரைக் கூலிப்படை ஏவிக் கொன்ற இளைஞர்… சூனியம் வைத்ததாக நினைத்து வெறிச்செயல்!

காஞ்சிபுரம் அருகேயுள்ள புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதாகும் பட்டு நெசவுத் தொழிலாளி மாணிக்கம். இவரின் மனைவி ராணி (47). இந்தத் தம்பதியருக்கு சசிகலா என்ற மகளும், பெருமாள் என்ற மகனும் இருக்கிறார்கள். சசிகலாவைத் திருத்தணி நாட்டுக்கோட்டை செட்டித் தெருவைச் சேர்ந்த சாய்ராம் என்பவருக்குத் திருமணம் செய்துகொடுத்தனர். இல்லற வாழ்க்கையைத் தொடர்ந்த சில நாள்களுக்குள்ளாகவே, கருத்து, வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து சசிகலா தாய் வீட்டுக்கே வந்துவிட்டார். இதனால், இருக் குடும்பத்தினரிடையே பகை வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி இரவு, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மின்னல் ஏரிக்கால்வாயின் முட்புதரில், கொலைசெய்து வீசப்பட்ட நிலையில் மாணிக்கமும், அவரின் மனைவி ராணியும் இறந்து கிடந்தனர். தகவலறிந்து சென்ற அரக்கோணம் தாலுகா போலீஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை செய்யப்பட்ட தம்பதியர்

இந்த வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா உத்தரவிட்டார். அதன்படி, ராணிப்பேட்டை எஸ்.பி தீபா சத்தியன் மேற்பார்வையில், அரக்கோணம் டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் தலைமையில் 16 காவலர்கள்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, தம்பதியர் கொலையில் தொடர்புடையதாக திருத்தணியைச் சேர்ந்த கூலிப்படை நபரான சுனில்குமார் என்பவர் நேற்றைய தினம் தணிகைப்போளூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

அதில், “திருத்தணி நாட்டுக்கோட்டை செட்டித் தெருவைச் சேர்ந்த 25 வயதாகும் தரனேஷ் என்கிற தரணி என்பவரின் தூண்டுதலின்பேரில், சதித்திட்டம் தீட்டி தம்பதியரை சோளிங்கர் வரச்சொல்லி, திருத்தணி கன்னிகாபுரம் பகுதிக்கு காரில் கடத்திச் சென்றோம். அங்குவைத்து, தம்பதியரை அடித்து கொலைசெய்தோம். பின்னர், இருவரின் உடல்களையும் மின்னல் ஏரிக்கால்வாய் அருகே முட்புதரில் போட்டுவிட்டு வந்துவிட்டோம். மொத்தம் 4 பேர் சேர்ந்து இந்த இரட்டைக் கொலையைச் செய்தோம்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, சுனில்குமாரை கஸ்டடிக்குள் கொண்டுவந்த போலீஸார், சதித்திட்டம் தீட்டிய தரணி, திருத்தணி சன்னதி தெருவைச் சேர்ந்த சந்திரன் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைக்கான காரணம் தெரியவந்திருக்கிறது. “கொலைச் செய்யப்பட்ட மாணிக்கத்தின் மருமகன் சாய்ராமின் உடன்பிறந்த தம்பிதான் வழக்கில் சதித்திட்டம் தீட்டிக்கொடுத்த தரணி. அண்ணி பிரிந்து சென்றப் பிறகு அண்ணனின் உடல்நலம் பாதிக்கப்பட்டதைப் பார்த்து அவர் கோபப்பட்டிருக்கிறார். அண்ணனுக்கு அண்ணி குடும்பத்தினர் சூனியம் வைத்துவிட்டதாகவும் தரணியிடம் உறவினர்கள் கூறியிருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட நபர்கள்

அதுமட்டுமின்றி, தன் மகளின் எதிர்காலம் கருதி சொத்து விவகாரத்திலும் மாணிக்கம், அவர் மனைவி ராணி தலையிட்டு பிரச்னை செய்திருக்கிறார்கள். இதனால் கோபப்பட்ட தரணி, அண்ணி குடும்பத்தாரை பழித்தீர்க்க வேண்டும் என்பதற்காக திருத்தணி கூலிப்படையைச் சேர்ந்த சுனில்குமாரை அணுகியிருக்கிறார். அண்ணியின் அப்பா மாணிக்கம், அம்மா ராணியை கொலை செய்வதற்காக பணமும் கொடுத்திருக்கிறார். சுனில்குமார் தலைமையிலான கூலிப்படை கும்பல் கடந்த 23-ம் தேதி கடன் பிரச்னைக்கு வழிகாட்டுவதாகக்கூறி மாணிக்கத்தையும், அவரின் மனைவி ராணியையும் சோளிங்கருக்கு வரவழைத்திருக்கிறார்கள். அங்கிருந்து கடத்திச்சென்று கதையை முடித்திருக்கிறார்கள்” என்கிறது போலீஸ். இதனிடையே, போலீஸ் கஸ்டடியிலிருந்த தரணி உட்பட மூன்று பேரும் சிறையிலடைக்கப்பட்டனர். தம்பதியர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரையும் போலீஸார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.