அம்மா உணவகத்தை நடத்த ரூ.100 கோடி வேண்டும்: அரசிடம் நிதி கேட்ட சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களை நடத்த ரூ.100 கோடி நிதி கேட்டு தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியின்போது, 2013-ல் அம்மா உணவகம் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் வார்டுக்கு இரண்டு மற்றும் அரசு மருத்துவமனைகளில் 7 என மொத்தம் 407 இடங்களில் தொடங்கப்பட்டது. இதில், பல்வேறு காரணங்களுக்காக ஐந்து உணவகங்கள் மூடப்பட்டன. தற்போது, 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அம்மா உணவகத்தில் தினசரி 2 லட்சம் இட்லி, 10 ஆயிரம் அளவில் சாதங்கள், 70 ஆயிரம் சப்பாத்திகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், தினசரி 5 லட்சம் ரூபாய் என, ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், அதற்கான செலவு ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் ஆகிறது. இதனால், 120 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இந்நிலையில் அம்மா உணவகத்தை நடத்த ரூ.100 கோடி நிதி கேட்டு சென்னை மாநகராட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த ரூ.100 கோடி நிதி கேட்டு சென்னை மாநகராட்சி சார்பில் தமிழக அரசுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது. சென்னையில் அம்மா உணவகத்தை தொடர்ந்து சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், அம்மா உணவகம் தொடர்பாக பொது கணக்குக் குழு கேட்ட கேள்விக்கு விரிவாக பதில் அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சட்டமன்ற பொதுக் கணக்கு கூட்டத்தில், அம்மா உணவகத்திற்கு சந்தை விலையில் பொருட்கள் வாங்கியது ஏன் உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கேள்விகளுக்கு விரிவான பதில் அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.