குழந்தைகளின் சிரித்த முகம் நம் அனைத்துக் கவலைகளையும் மறக்கச் செய்துவிடும். ஆனால், ஆஸ்திரேலிய குழந்தை ஒன்று பிறக்கும்போதே நிரந்தர புன்னகையோடு பிறந்துள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிறிஸ்டினா வெர்ச்சர் மற்றும் பிளேஸ் முச்சாவிற்கு பிறந்த பெண் குழந்தை, அய்லா சும்மர் முச்சா. குழந்தை, வாய்ப்பகுதியின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளை பாதிக்கும் Bilateral Microstomia எனப்படும் மிக மிக அரிதான பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு குறித்த விவரம் அறிந்திராத குழந்தையின் பெற்றோர், இது தங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
2007-ம் ஆண்டு Cleft Palate-Craniofacial என்ற இதழில் வெளியிட்ட ஆய்வில் உலக அளவில் 14 பேர் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தனர். மிக மிக அரிதாக பாதிக்கும் இக்குறைப்பாடு, இந்தக் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே உருவானதாக ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘ஆனால் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் இக்குறைபாடு இருந்தது தெரியவில்லை. ஒரு தாயாக நான் என்ன தவறு செய்தேன்?மருத்துவர்கள், இது பெற்றோரால் ஏற்பட்ட தவறு அல்ல என்றனர்’ என்கிறார் குழந்தையின் தாய். குழந்தையின் வாய் சீராகச் செயல்பட மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
குழந்தையின் உடல்நிலை ஒருபுறம் இருக்க, சமூக வலைதளங்களான டிக்டாக் மற்றும் இன்ஸ்டாவில் இந்தக் குழந்தையின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நிரந்தரமான சிரிப்பை கொண்டிருக்கும் இந்தக் குழந்தையைப் பார்க்கும்போதே பலரின் முகதிலும் அது புன்னகையைக் கொண்டுவர, அனைவருக்கும் செல்லக் குழந்தை ஆகியுள்ளது. மேலும், அரிதான இந்தக் குறைப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, தங்கள் அனுபவங்களையும் குழந்தையின் பெற்றோர் பதிவிட்டு வருகின்றனர்.