டெல்லி தியாகராஜா ஸ்டேடியத்தில், ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார், தனது வளர்ப்பு நாயுடன் மைதானத்தில் நடந்து செல்லும் புகைப்படம் குறித்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. இதற்காக, அங்கு பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு நாளும் சீக்கிரமாக வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களுக்கு பிறகு, ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் உடனடியாக’ ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
வியாழக்கிழமை பிற்பகுதியில் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ள கிர்வாரின் மனைவி ரிங்கு துக்காவும் அருணாச்சல பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிர்வார் மற்றும் துக்கா ஆகியோரின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை மற்றும் கிர்வார், தனது நாயுடன் ஸ்டேடியம் டிராக்கில் இருக்கும் வீடியோ, ஊடகங்களில் விமர்சனங்களை கிளப்பியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக “மேலும் நடவடிக்கை” எடுக்க உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தியாகராஜ் ஸ்டேடியத்தில் உள்ள வசதிகளை சஞ்சீவ் கிர்வார் மற்றும் அவரது மனைவி ரிங்கு துக்கா தவறாக பயன்படுத்தியது தொடர்பான செய்தி குறித்து டெல்லி தலைமை செயலாளரிடம், உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது. இதையடுத்து வியாழன் மாலையில் உண்மை நிலை குறித்து தலைமைச் செயலாளர் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதற்கிடையில், கிர்வார் லடாக்கிற்கும், ரிங்கு துக்கா அருணாச்சல பிரதேசத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிர்வார் மற்றும் துக்கா ஆகியோர் AGMUT கேடரின் 1994-பேட்ச் அதிகாரிகள். கிர்வார், டெல்லி அரசாங்கத்தின் மிக மூத்த அதிகாரிகளில் ஒருவர். சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும் உள்ளார். துக்கா தற்போது டெல்லி அரசாங்கத்தில் நிலம் மற்றும் கட்டிடத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை தனது கருத்துக்களுக்காகத் தொடர்பு கொண்டபோது, கிர்வார் தனது செல்லப்பிராணியை “சில நேரங்களில்” நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றதாக ஒப்புக்கொண்டார்,
ஆனால் விளையாட்டு வீரர்களின் பயிற்சி வழக்கத்தை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டுவதை மறுத்தார். மேலும் “இது ஆட்சேபனைக்குரியதாக இருந்தால், நான் அதை நிறுத்துவேன் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“