திருவனந்தபுரம்: சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ‘‘ஆசாதி கா அமிர்த் உத்ஸவ்’வின் தொடர்ச்சியாக பெரும்பாலான மாநில சட்டசபைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை திருவனந்தபுரம் சட்டசபையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ேநற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாது: பெண்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்கள். அதனால்தான் அவர்களை சக்தியின் மறு உருவம் என்று நாம் கூறி வருகிறோம். அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். கடைசியாக ஆயுதப் படைகளில் அவர்களது பங்களிப்பையும் ஒரு உதாரணமாகக் கூறலாம். மக்கள் தொகையில் பாதியாக இருந்த போதிலும் துரதிஷ்டவசமாக பெண்களால் பெருமளவு முன்னேற முடியாமல் இருந்தது. அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே பெண்கள் அதிக அளவில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். பல நாடுகளில் இப்போதும் ஒரு பெண் பிரதமர் கிடைக்கவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக நமக்கு ஒரு பெண் பிரதமர் கிடைத்துள்ளார். மேலும் ஜனாதிபதி பதவியில் எனக்கு முன் ஒரு பெண் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வலிமை வாய்ந்த அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை பெற சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆனது. ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு நிலைமை ஏற்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராய் விஜயன், கேரள சபாநாயகர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் அரசியல் அமைப்பு சட்டமும் பெண்கள் உரிமைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. அதில் குஜராத் சட்டசபை சபாநாயகர் நிமா பென் ஆச்சார்யா, உத்தரகாண்ட் சபாநாயகர் ரிது கந்துரி, திமுக எம்பி கனிமொழி, புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரா பிரியங்கா, முன்னாள் எம்பி பிருந்தா கராத் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் கனிமொழி எம்பி பேசுகையில், ‘இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் 15 பெண்கள பங்கேற்றனர். ஆனால், இப்போது அரசியலில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாக இருக்கிறது. மாநில சட்டமன்றங்களில் 9 முதல் 10 சதவீத பெண்கள் மட்டுமே உள்ளனர். பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அனைத்து கட்சிகளுமே ஆதரவு அளித்தன. ஆனால், இதுவரை அது சட்டமாக்கப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை,’ என்று கூறினார்.