பீகார் மாநிலத்தில் வசித்து வரும் சீமா என்ற 10 வயதுப் பெண், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் தன்னுடைய ஒரு காலை இழந்தார். படிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட சீமா, இதை ஓர் இடையூறாகக் கருதாமல், பள்ளிக்குச் சென்று படித்து வருகிறார்.
வறுமையின் காரணமாக மூன்று சக்கர வண்டியோ, ஊன்று கோலோ வாங்க முடியாத நிலையில் உள்ளனர் சிறுமியின் குடும்பத்தினர். இந்தக் காரணத்தினால் தன் படிப்பு தடை படக்கூடாது என நினைத்து, வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு ஒற்றைக் காலிலேயே குதித்து குதித்துச் சென்று வருகிறார் சீமா. ஃபதேப்பூர் நடுநிலை பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சீமா அங்கு பயிலும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.
இச்சிறுமி ஒற்றைக் காலோடு பள்ளி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனதைத் தொடர்ந்து பலரும் இச்சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
ஜமுவி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அவனீஷ்குமார் சிங், சிறுமியின் மண்குடிசை வீட்டுக்கே நேரில் சென்று அவளுக்கு மூன்று சக்கர சைக்கிளை வாங்கித் தந்து, சிறுமியின் தைரியத்துக்கு மாவட்ட நிர்வாகம் தலைவணங்குவதாகச் சொல்லியுள்ளார். தவிர சிறுமிக்கு வீடும், செயற்கை கால்களும் கிடைக்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூடும் சீமாவுக்கு உதவ முன்வந்துள்ளார். இச்சிறுமி பள்ளிக்கு செல்லும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, “தற்போது இவள் பள்ளிக்கு ஒற்றைக் காலில் அல்ல, இரண்டு கால்களில் குதித்துச் செல்லலாம். இரண்டு கால்களில் நடப்பதற்கான நேரம் வந்துவிட்டது, நான் டிக்கெட்டை அனுப்புகிறேன்” என பதிவிட்டு இருந்தார். சிறுமியின் நிலை கண்டு உடனடியாக உதவியவர்களுக்கு மக்கள் நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.