பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கன்னட திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார் என்கிற செய்தி இன்றைக்கு சமூக வலைதளங்களில் வைரல். அந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகயிருக்கிறது என்பது போன்ற செய்திகள் வலம் வந்தன. அண்ணாமலை உண்மையாகவே திரைபடத்தில் நடித்திருக்கிறாரா?
ஆம், என்கிறார்கள் நெருங்கிய வட்டத்தினர். அண்ணாமலை படத்தில் நடித்திருப்பது உண்மை தான். முன்னர் கர்நாடகாவில் இந்திய காவல் பணி அதிகாரியாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற போது, கன்னட படமொன்றில் நடிப்பதற்கு அண்ணாமலை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
நீச்சல் வீரர் K.S Vishwas வாழ்வை மையப்படுத்தி எடுக்கபட்டிருக்கும் அந்தப் படத்தில் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் அண்ணாமலை நடித்திருக்கிறார். இளைஞர்களுக்கு வழிகாட்டும் கதாபாத்திரம் என்பதால் சம்பளம் எதுவுமின்றி அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாராம். அந்தப் படத்திற்காக அவர் கேட்ட சம்பளம் ஒரு ரூபாய். அந்த ஒரு ரூபாயையும் சபரிமலை பயணத்திற்கு சென்ற போது ஐயப்பனுக்கு காணிக்கையாக செலுத்தியிருக்கிறார் அண்ணாமலை.
படத்தில் நடித்து முடித்ததும் அவரின் கதாபாத்திரத்துக்கு வேறு ஒருவர் டப்பிங் கொடுப்பதாக இருந்தது. அதனையும் தானே செய்து கொடுக்கிறேன் எனப் படத்தில் டப்பிங்கும் பேசியுள்ளார்.
படக்குழுவோ அண்ணாமலையோ இதனை அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை. இந்தச் செய்தி உண்மை தானா எனப் பேசப்பட்டு வந்த நிலையில், உண்மை தான் என்பது உறுதியாகியிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் ஜூன் 2-வது வாரம் வெளியாகலாம் என்றும் படம் ஜூன் இறுதியில் அல்லது ஜூலையில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.