பெங்களூரு: கடந்த 2018ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.10 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம், ஏராளமான சொத்துக்களின் ஆவணங்கள், கணக்கில் வராத தங்க வைர நகைகளை கைப்பற்றினர்.
இதுகுறித்து விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் டி.கே.சிவகுமார் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திஹார் சிறையில் 50 நாட்கள் அடைக்கப்பட்டார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற அவர், தற்போது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘‘வழக்கில் கைது செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அமலாக்கத்துறை 3 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்துள்ளது. அரசியல் ரீதியாக என்னை பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக இறங்கியுள்ளது. இதையெல்லாம் சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்றார்.