மும்பை: இந்தியாவில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் மொத்த நோட்டுகளில் வெறும் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது.
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக்கப்பட்டன. இந்தியாவின் மொத்த பண சுழற்சியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளே 68 சதவீதம் உள்ளன. அதன் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய். இவற்றைப் புதிய 500, 1000 ரூபாய் தாள்களாக மாற்ற வேண்டும் என்றால், அச்சிடுவதற்கே மாதக்கணக்கில் ஆகும். அதுவே 500, 2,000 ரூபாய் நோட்டுகளாக அச்சிட்டால், 50 நாட்களுக்குள் அச்சிட்டுவிடலாம் என்ற அடிப்படையில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு கொண்டு வரப்பட்டது.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 4 நாட்களில் 2,000 ரூபாய் நோட்டு அறிமுகமானது. எந்த வங்கிக்குப் போனாலும் சரி, ஏ.டி.எம் மையத்துக்குப் போனாலும் சரி ரூ.10 ஆயிரம் எடுத்தால் குறைந்தது 4 நோட்டுகள் 2,000 ரூபாய்த் தாளாகவே இருந்தன. இப்போது நிலைமை தலைகீழ். 2,000 ரூபாய் நோட்டுகளைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது.
2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து தொடர்நது குறைந்துகொண்டே வருகிறது. ஏ.டி.எம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை. தட்டுப்பாடு காரணமாக அவற்றை வங்கிகளில் விநியோகிப்பதைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்வதே காரணம் என்று கூறப்பட்டது.
புழக்கத்தில் குறைவாக இருந்தாலும் ரூ.2000 ஆயிரம் நோட்டு மீண்டும் அச்சிடப்படாது என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்து விட்டது.
இந்தநிலையில் ரூ.2000 நோட்டு புழக்கம் மொத்த நோட்டுகளில் 1.6 சதவீதமாக குறைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின்படி, இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளில் 214 கோடி அல்லது 1.6% ஆக எட்டியுள்ளது.
புழக்கத்தில் உள்ள அனைத்து வகை ரூபாய் நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 13,053 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12,437 கோடி குறைவாகும்.
2020-ம் ஆண்டு மார்ச் இறுதியில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 மதிப்புள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 274 கோடியாக இருந்தது. இது புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கையில் 2.4% ஆகும். 2021-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 245 கோடி ரூபாயாக இருந்தது.
இது மொத்த புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 2 சதவீதமாகும். கடந்த மார்ச் இறுதியில் 214 கோடியாக குறைந்தது. மொத்த நோட்டுகளில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் வெறும் 1.6 சதவீதமாக குறைந்தது.
மதிப்பு அடிப்படையில், ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளின் மதிப்பில் 22.6% இல் இருந்து மார்ச் 2021 இன் இறுதியில் 17.3% ஆகவும், மார்ச் 2022 இறுதியில் 13.8% ஆகவும் குறைந்தது.