தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக இன்று மலை கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம்போல் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும்..ஆனால் இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது இதையடுத்து கடந்த 24 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று காலை தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தடைந்தது. கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது . இதையடுத்து இன்று மாலை அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்து, நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.
இதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி இன்று கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு அதிகாரிகள் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர். கல்லணை திறப்பு விழா நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை .சந்திரசேகரன், ஜவாஹிருல்லா, நாகை மாலி, முன்னாள் அமைச்சர் மதிவாணன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட நீர்வளத் துறையின் அதிகாரிகள், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.