கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்புகையில் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டு அது வீடியோவாகவும் எடுக்கப்பட்ட நிகழ்வு கேரளாவையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கு மிகப்பெரிய தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டு, மூன்று மாத சிறை தண்டனைக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை செய்யும் அதிகாரிகளை கொல்வதற்காக திட்டம் தீட்டினார் என சமீபத்தில் இன்னொரு வழக்கும் அவர் மீது பதியப்பட்டு அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்கு நடந்த அந்தக் கொடூர நிகழ்விலிருந்து தான் எப்படி தேறி வருகிறேன் என்றும், தனக்கு நியாயம் கிடைக்குமா என்றும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிப்பது போல தெரிந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கு தடம் மாறுகிறது என்றும், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் அரசியல் பின்னணி காரணமாக ஏதோ கடமைக்கு செயல்படுவதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனை பாதிக்கப்பட்ட நடிகை நேரில் சந்தித்துள்ளார். அப்போது சம்பந்தப்பட்ட நடிகையிடம் இந்த வழக்கில் நிச்சயமாக அவருக்கு நியாயம் கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளையும் விரிவாக விளக்கினாராம் முதல்வர். கிட்டத்தட்ட கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்து நிருபர்களை சந்தித்த சம்பந்தப்பட்ட நடிகை, “முதல்வர் கூறிய பதில்கள் எனக்கு திருப்தி அளிக்கிறது.. நிச்சயமாக எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுநாள்வரை சோசியல் மீடியாவில் பதிவுகளாகவும் நீதிமன்றத்தில் கோரிக்கைகளாகவும் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி வந்த பாதிக்கப்பட்ட நடிகை, தற்போது மாநில முதல்வரையே நேரில் சந்தித்து பேசி இருப்பதால் வரும் நாட்களில் இந்த வழக்கு சூடு பிடிக்கும் என்றும் நடிகர் திலீப்புக்கு இன்னும் நெருக்கடி அதிகம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.