டெல்லி: கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது என்று ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொரோனா பேரிடரால் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது என்பது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சகம் தேசிய அளவில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 3,5,8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் ஆன்லைன் முறையில் சோதிக்கப்பட்டது. இதில் தமிழக மாணவர்களின் கற்றல் திறன், அனைத்து பாடப்பிரிவுகளிலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக குறைந்திருந்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களின் கற்றல் திறன் தேசிய சராசரியைவிட குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவுகளுடன் 2021ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஒப்பீடு செய்யப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஆன்லைன் முறையில் 4,145 பள்ளிகளில், ஒரு லட்சத்து 26 ஆயிரம் மாணவர்களிடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 19 ஆயிரம் ஆசிரியர்களும் பங்கேற்றனர். அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னை மற்றும் கடலோர மாவட்ட மாணவர்கள் மட்டும் பருவமழை காரணமாக சேர்த்துக்கொள்ளப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. ஆன்லைனில் வகுப்பின் போது மொபைல் போன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் தங்களது படிப்பு பாதிக்கப்பட்டதாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.