கரூரில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் கம்பம் பெருவிழாவில் கூட்டத்தில் சிக்கிய எம்பி ஜோதிமணி இரும்பு தடுப்புகளை ஏறி குதிக்கும் நிலை ஏற்பட்டது.
கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடும் விழா நேற்று நடைபெற்றது. இதை காண சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். ஆனால், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட்டு செய்யாததால் பல குளறுபடிகளும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
அதேபோல் எஸ்பி சுந்தரவடிவேல் தலைமையிலான போலீசார், விழாவில் கலந்து கொண்ட மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாதுகாப்பு கொடுப்பதிலேயே மிகுந்த அக்கறை காட்டியதாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்பி ஜோதிமணிக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கும் அவரை கம்பம் விடும் இடத்திற்கு அழைத்துச் செல்லவும் அக்கறை காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் செல்லும் வழியில் எம்பி ஜோதிமணி சிக்கிக்கொண்டார். அவரை கம்பம் ஆற்றில் விடும் இடத்திற்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல போலீசார் அக்கறை காட்டவில்லை. இதனால் எம்பி ஜோதிமணியும், அவரது உதவியாளர்களும் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன எம்பி ஜோதிமணி அங்கிருந்த இரும்பு தடுப்புகள் மீது ஏறி தாவிக் குதித்துச் சென்று கம்பம் விடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM