‘கோ பேக் மோடி’ கோஷத்தை கையில் எடுக்காதது ஏன்?- துரை வைகோ விளக்கம்

சென்னை:

பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ கோஷம் டிரெண்டிங் ஆகும். ம.தி.மு.க. ஆவேசமாக இந்த குரலை கையில் எடுக்கும். ஆனால் இந்த முறை அமைதியாக இருந்தது பற்றி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-

கடந்த கால சூழ்நிலை வேறு. அப்போது நீட் எதிர்ப்பு தலைதூக்கி நின்றது. தமிழகத்துக்கு எதிராக பல பிரச்சினைகளும் தலைதூக்கி நின்றன.

ஆனால் இந்த முறை தமிழக மக்கள் நலனுக்காக 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். முழுக்க முழுக்க தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். இந்த சூழ்நிலையில் ‘கோ பேக் மோடி’ என்பது நியாயமல்ல. முறையல்ல.

அமித் ஷா, தமிழக மக்களிடம் மோடி மீது அன்பும், ஆதரவும் பெருகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதே தேர்தல் வரும் போதுதான் பார்க்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, கொலைகள் அதிகரித்து விட்டது என்பது சரியல்ல. கடந்த ஆட்சியிலும் கொலைகள் நடந்தது. ஆனால் இப்போது குற்றவாளிகளை உடனே பிடிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கிறார்கள்.

பேரறிவாளன் விடுதலை என்பது காலம் கடத்தி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. அவரது விடுதலையை காங்கிரஸ் எதிர்ப்பது அந்த கட்சியின் தனிப்பட்ட கொள்கை.

மோடி நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்ததாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். அவர் அரசியல் செய்யவில்லை. அண்ணாமலைதான் அவதூறு பரப்புகிறார். அவரது பெயரையே நான் அவதூறு அண்ணாமலை என்றுதான் கூறுவேன்.

இவ்வாறு அவர்கூறினார்.

முன்னதாக ம.தி.மு.க. அலுவலகத்தில் தலைமை கழக செயலாளருக்கான அறை திறப்பு விழா நடந்தது. கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்ல கண்ணு திறந்து வைத்தார். அவருக்கு துரைவைகோ ஆளுயரமாலை அணிவித்தார். அதே போல் துரைவைகோவுக்கு ஆளுயர மாலை அணிவித்து நல்லகண்ணு வாழ்த்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.