சென்னை:
சென்னையில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பா.ம.க. வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றுபவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களை போன்று தீவிரமாக பணியாற்ற மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ‘பா.ம.க. சிறந்த செயல் வீரர்கள் விருது’ கடந்த 2020-ம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது.
கட்சி நிர்வாகிகளின் களப்பணி, தலைமையால் வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்தல், கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுதல் உள்ளிட்ட பணிகளை அளவீடு செய்து அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது பாராட்டு பத்திரம், ஒரு பவுன் தங்க நாணயம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 2021-ம் ஆண்டுக்கான பா.ம.க. சிறந்த செயல்வீரர் விருதுக்கு 5 பேரை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்ந்தெடுத்துள்ளார்.
பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாச்சி, பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராம.முத்துக்குமார், பசுமை தாயகம் பொதுச்செயலாளர் அருள் ரத்தினம், கடலூர் முன்னாள் மாவட்ட தலைவர் தட்டானோடை செல்வராஜ் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.
மேலும் சமூக முன்னேற்ற சங்க தலைவர் ச.சிவப்பிரகாசம், பா.ம.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் மீ.கா.செல்வகுமார், மாநில துணைத்தலைவர் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.ஆர்.எம். சுப்பிரமணிய அய்யர், பா.ம.க. மகளிர் அணி மாநில தலைவர் நிர்மல் ராசா, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி.செந்தில் ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது.
சென்னை திருவேற்காட்டில் நாளை (28-ந்தேதி) பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 10 பேருக்கும் சிறந்த செயல்வீரர் விருதுகளை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்குகிறார். 2022-ம் ஆண்டில் பா.ம.க. செயல்வீரர் விருதுகளை பெற அனைத்து நிர்வாகிகளும் கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்.