சென்னை விமான நிலையத்தில் சந்திப்பு- அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்த மோடி

சென்னை:

பிரதமர் மோடி சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

நிறைவேற்றப்பட்ட 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிதாக 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.

நேரு விளையாட்டு அரங்கில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு முடிந்த பிறகு பிரதமர் மோடி காரில் சென்னை விமான நிலையம் சென்றார். விமான நிலையத்தில் மோடியை சந்திக்க 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

அவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கி வழி அனுப்பினார்.

அதன்பிறகு அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் அறையில் அ.தி.மு.க. தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகிய 5 பேரும் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா இடம்பெற்று இருப்பதால் அரசியல் ரீதியாகவே இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் கூட்டணியின் பலவீனம் என்பதை இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி சுட்டிக்காட்டி இருக்கிறார்.

2024-ம் ஆண்டு வரப்போகும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இப்போதே பணியாற்ற வேண்டும். இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. தலைவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பது நல்லதல்ல என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி ‘உங்களுக்குள் இருக்கும் மனக்குறைகளை மனம் விட்டு பேசி தீருங்கள். இருவரும் இணைந்து செயல்படுங்கள். அதுதான் அ.தி.மு.க. எதிர்காலத்துக்கு நல்லது’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

தலைமை மீது நம்பிக்கை வராவிட்டால் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள். மக்களும் நம்பிக்கை இழந்து விடுவார்கள். அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள். கட்சியை பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனையின் போது சசிகலா பிரச்சினையும் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது. அந்த 10 நிமிடமும் அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்வதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. பிறகு பிரதமர் மோடியிடம் அ.தி.மு.க. தலைவர்கள் விடைபெற்று சென்றார்கள்.

ஏற்கனவே அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இடையே பனிப்போர் நடக்கிறது. கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷமும் வலுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் பிரதமர் மோடி சமரச முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக விழாவுக்கு வந்த போது வரவேற்க சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே… எப்படி இருக்கீங்க என்று உரிமையுடன் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திலும் உரிமையுடன் அ.தி.மு.க. தலைவர்களுடன் நட்பு பாராட்டியதை அ.தி.மு.க. தலைவர்கள் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் குறிப்பிட்டனர்.

வருகிற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி என்ற இலக்கை நோக்கி நகரும் பா.ஜனதா அதற்கு கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான அடித்தளமே நேற்றைய சந்திப்பு என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.