நீச்சல் வீரர் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கன்னடத்தில் தயாராகிவரும் அரபி என்ற படத்தின் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திரைத்துறையில் தனது என்ட்ரியை கொடுத்துள்ளார்.
தமிழகத்தின் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. கோவையில் எஞ்சினியரிங் படித்த அவர், தொடர்ந்து லக்னோவில் ஐஎம்எம்-ல் பட்டம் படித்து ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று கர்நாடக மாநிலத்தில் கர்லா மாவட்டத்தில் துணை காவல் கண்கானிப்பாளராக பொறுப்பேற்றார்.
தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அண்ணாமலைக்கு ப்ரமோஷனும் தேடி வந்தது. அதன்படி 2015-ம் ஆண்டு காவல் கண்கானிப்பாளராகவும், 2018-ம் ஆண்டு பெங்களூர் துணை ஆணையராகவும் பதவி வகித்து வநதார். ஆனால் திடீரென கடந்த 2019-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்யப்போவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இயற்கை விவசாயம் தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வந்த அண்ணாலை கடந்த 2020-ம் ஆண்டு திடீரென பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து கடந்த சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து அண்ணாமலை தமிழக பாஜன தலைவராக நியமிக்கப்பட்டார்.
தற்போது தமிழகத்தில் பரபரப்பான அரசியல் கருத்துக்களை சொல்லி நாள்தோறும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அண்ணாமலை சத்தமே இல்லாமல் ஒரு கன்னட படத்தில் நடித்து முடித்துள்ளார். இரண்டு கைகள் இல்லாமல் நீச்சலில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விஸ்வாசின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த படத்திற்கு அரபி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் அண்ணாமலை நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இந்த படத்தில் பயிற்சியாளராக நடிக்க அண்ணாமலையிடம் படத்தின் இயக்குநர் கேட்டபோது உடன ஒப்புக்கொண்ட அண்ணாமலை இந்த படத்திற்காக வெறும் ஒரு ரூபாய் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுளள்ளது.
தமிழக பாஜக தலைவராக பிஸியாக இயங்கி வரும் அண்ணாமலை இந்த படத்தில் நடித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் படத்தின் வெளியீட்டிற்காக பாஜகவினர் காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“