டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், கட்டாய தமிழ்த் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்களித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி (TNPSC), டி.ஆர்.பி. (TRB), டி.என்.யு.எஸ்.ஆர்.பி. (TNUSRB) உள்ளிட்ட போட்டித் தேர்வு முகமைகள் ஆண்டுதோறும் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி அரசுப்பணிக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றன. அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ்த் தாள் தேர்வு இடம்பெறும் என்று அரசு அறிவித்து, அந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கும் வந்துள்ள நிலையில், தற்போது அதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்களித்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக்குறைபாடு, செவித்திறன் குறைபாடு, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு, மனநலம் சார்ந்த குறைபாடுகள், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுகள், பன்முகக் குறைபாடுகள் என்று 8 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும், 40 சதவிகிதத்துக்கு கீழ் குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளிகளுக்கும், கட்டாய தமிழ்த் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM