தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அடுத்த மாதம் (ஜூன்) 17-ந்தேதி நடைபெறுகிறது.

2022-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வை எழுத மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 10.64 லட்சம் பேர் ஆண்கள். 8.07 லட்சம் பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 1.69 லட்சம் மருத்துவ இடங்களுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

நீட் தேர்வு எழுதுவதற்காக கடந்த ஆண்டை விட கூடுதலாக 2.57 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வை தமிழில் எழுத 31 ஆயிரத்து 803 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழில் எழுதுவதற்கு விண்ணப்பித்து இருப்பவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நீட்தேர்வு 12 இந்திய மொழிகளில் நடந்து வருகிறது. இந்த 12 இந்திய மொழிகளிலும் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 274.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டை விட 2.6 லட்சம் பெண்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள். இது 41 சதவீதம் அதிகமாகும். நீட் தேர்வு தொடங்கியபோது கடந்த 2017-ம் ஆண்டு 11.4 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினார்கள். தற்போது 18.7 லட்சம் பேர் எழுதுகிறார்கள். நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை கடந்த 2017-ம் ஆண்டு முதல் வருடத்துக்கு 1.5 லட்சம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது.

கோவிட் தொற்று காலமான கடந்த 2020-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 78,060-ம், 2021-ம் ஆண்டு 17,342-ம் அதிகரித்தது.

இந்தியாவில் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் 2 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 1.2 லட்சம் பேர் எழுதினார்கள். தற்போது 2.5 லட்சம் பேர் இந்தியில் எழுதுகிறார்கள். மற்ற இந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

குஜராத்தி மொழியில் 50 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதுகிறார்கள். பெங்காலி மொழியில் 42 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 2.5 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 2.1 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தலா 1.4 லட்சம் பேரும், கர்நாடகாவில் 1.3 லட்சம் பேரும், கேரளாவில் 1.2 லட்சம் பேரும் நீட் தேர்வை எழுதுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.