பிரதமர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காதது ஏன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். விழாவில் வணக்கம் என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கிய அவர், தமிழ் மொழி
நிலையானது என்றும், தமிழ்நாடும் தமிழ்நாட்டின் கலாச்சாரமும் உலகளாவியது என்றும், தமிழ்நாட்டு மக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் புகழ்ந்தார்.
விளையாட்டு உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தலைசிறந்தவர்களாக இருப்பதாக மோடி குறிப்பிட்டார். இந்நிலையில் சென்னையில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக இணைந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்து
இசைக்கப்பட்ட போது, எழுந்து நிற்காதது ஏன் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 2018-ம் ஆண்டு ஐ.ஐ.டி.-யில் நடந்த விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்தை நிதின் கட்கரி புறக்கணித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால், தற்போது அமைச்சர் எழுந்து நிற்காதது எதேச்சையாக நடந்ததாக தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டு மக்களை மத்திய அமைச்சர் அவமதித்து விட்டதாக கூறியுள்ள மனோ தங்கராஜ், இது குறித்து நிதின் கட்கரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM