பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நேற்று மாலை ஐந்து மணியளவில் சென்னை வந்தார். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகப் பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெங்களூரு-சென்னை 4 வழி விரைவு சாலையின் 3-ம் கட்ட பணிகளுக்கும், துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலை உள்ளிட்ட ரூ.31,000 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் வணக்கம் எனத் தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். இந்த நிலையில் சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது அவர் எழுந்து நிற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்ககாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “கடந்த 2018-ம் ஆண்டு ஐ.ஐ.டி-யில் நடந்த விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்தை நிதின் கட்கரி புறக்கணித்தார். அதனால் தற்போது அமைச்சர் எழுந்து நிற்காதது எதார்த்தமாக நடந்ததாகத் தெரியவில்லை. இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை மத்திய அமைச்சர் அவமதித்துள்ளார். தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏன் எழுந்து நிற்கவில்லை என விளக்களிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்