தேசிய கல்விக் கொள்கை நமது கடந்த கால பெருமையை மீட்கும்- ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், தேசிய கல்வி கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. 
நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் வளர்ச்சிக்காக கல்வியில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டு தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. 
தேசிய கல்வி கொள்கையால் கல்வித்துறையில் புதிய சீர்திருத்தம், புதிய மறுமலர்ச்சி ஏற்படும். தொலைநோக்கு பார்வையோடு தேசிய கல்வி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 
தேசிய கல்வி கொள்கையின் அடித்தள தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதனை முழுமையாக படித்தால்தான் புரிந்து கொள்ள முடியும். அப்போதுதான் அதனை செயல்படுத்த முடியும். 
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள்,  நமது பூர்வீகக் கல்வி முறை, தொழில்துறையை  திட்டமிட்டு அழித்தனர். இதனால் இந்திய சமூக அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளுக்கு அடித்தளமிட்டது. 
ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் மில், இந்தியாவின் இழிவான இட்டுக்கட்டப்பட்ட வரலாறு கொண்ட பாடப்புத்தகத்தை உருவாக்கினார்.
காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெறவும், இந்தியாவை மீட்டெடுக்கவும் தேசியவாதம் ஒரு வழியாகும். 2014 ஆண்டில் ஒரு புரட்சிகர மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது.  
இப்போது தேசிய கல்விக் கொள்கை இந்திய அறிவு அமைப்பு உட்பட நமது கடந்த காலத்தின் பெருமையை மீண்டும் கண்டுபிடிப்பதில் புரட்சிகர மாற்றத்தை ஆதரிக்கிறது.
பல மொழிகள், பல இனங்கள், பல விதமான பழக்கங்கள் இவை அனைத்தும் ஒன்றிணைத்து தேசிய கல்வி கொள்கை திட்டத்தின் மூலம் கல்வி முறையை தரம் உயர்த்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
சரியான அணுகுமுறையுடன் தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப் படுத்தப்பட கல்வியாளர்கள் பெரிதும் உதவியாக இருந்து வருகின்றனர்.  
இந்தியா தற்போது 75வது ஆண்டு சுதந்திர விழாவை கொண்டாடி வருகிறது. அடுத்த கால் நூற்றாண்டு முக்கியமானது. நமது தேசம் 2047 ஆண்டில் 100 வது ஆண்டு சுதந்திர விழாவை கொண்டாடும் போது உலகத்தின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கி தேசிய கல்வி கொள்கை பயனிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.