சென்னை: “மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை விழா அல்ல” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
சென்னையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து விலக்கு, கச்சத் தீவு மீட்பு, தமிழக திட்டங்களுக்கு நிதி பங்களிப்பதை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
முதல்வரின் இந்தப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நரேந்திர மோடி பிரதமராக வந்திருப்பது பாஜக நிகழ்ச்சிக்காக அல்ல. பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் அரசியல் செய்துள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டு மக்களின் நியாமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைப்பது முதலமைச்சரின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார்.
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) May 27, 2022
இதற்கு பதில் அளித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை விழா அல்ல” என்று பதில் அளித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நியாமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைப்பது முதலமைச்சரின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார்.
மாறாக மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை விழா அல்ல. தமிழ் மொழியைப் பற்றி அவ்வப்போது வாய்ஜாலம் காட்டும் பிரதமர், சம உரிமைக்கான கோரிக்கை பற்றியும் கூட எதுவும் பேசவில்லை. அண்ணாமலைக்கு இதைப் பற்றியெல்லாம் அக்கறை உண்டா?
முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை நிரைவேற்றுவது பற்றி எதையும் சொல்லாத பிரதமரின் உரைதான் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. ஆனால், அதை மறைத்து – தமிழக மக்களின் முக்கியமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்த முதலமைச்சரின் உரையினை அண்ணாமலை விமர்சிப்பது அவரின் அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.