புதுடெல்லி: தங்களின் வளர்ப்பு நாயுடன் வாக்கிங் செல்லும் பொருட்டு விளையாட்டு மைதானத்திலிருந்து பயிற்சி செய்யும் வீரர்களை முன் கூட்டிய வெளியேற்றி மைதானத்தை பூட்டி இடையூறு செய்து வந்த ஐஏஎஸ் தம்பதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ளது தியாகராஜா விளையாட்டு மைதானம். இந்த விளையாட்டு மைதானத்தில் ஏராளமான வீரர்கள் குறிப்பாக தடகள வீரர்கள் பயிற்சி செய்வது வழக்கம். இங்கு வீரர்கள் இரவு 8.30 மணி வரையும் பயிற்சி மேற்கொள்ள அனுமதி உண்டு. இந்நிலையில் டெல்லி அரசின் வருவாய்துறை முதன்மை செயலாளர் சஞ்சீவ் கிர்வார் மற்றும் அவருடைய மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான ரிங்கு துக்கா ஆகியோர் அங்கு நாயுடன் வாக்கிங் செல்வதற்காக வீரர்களை இரவு 7 மணிக்கே பயிற்சியை முடிக்க உத்தரவிடப்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாகவே நடந்துள்ளது. மனைவி மற்றும் வளர்ப்பு நாயுடன் சஞ்சீவ் கிர்வார் அங்கு சுமார் 30 நிமிடம் நடைபயிற்சி செய்து வருவது தெரியவந்தது. இதுதொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதங்களில் வைரலாகின. இதனையடுத்து இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சஞ்சீவ் கிர்வார் ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிக்கும், அவரது மனைவியை அருணாசலப் பிரதேசத்திற்கும் இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மஹூவா மொய்த்ரா கண்டனம்: இந்நிலையில் தவறு செய்த அதிகாரியை வட கிழக்கு மாநிலத்துக்குப் பணியிட மாற்ற உத்தரவுக்கு திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “தவறு செய்த அதிகாரியை எதற்காக வட கிழக்கு மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளீர்கள். வட கிழக்கு மாநில நலன் பற்றி வாய்ஜாலம் காட்டிவிட்டு குப்பையை ஏன் அங்கு கொட்டுகிறீர்கள். இதை எதிர்ப்போம்” என்று குறிப்பிட்டு மத்திய உள் துறை அமைச்சகத்தை டேக் செய்துள்ளார்.