உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான `நெஞ்சுக்கு நீதி’ படத்தில் வில்லன் பாத்திரத்தில் மிரட்டியிருந்தார் பிக் பாஸ் தாத்தா சுரேஷ் சக்ரவர்த்தி. அவர் படம் குறித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
‘நெஞ்சுக்கு நீதி’ வில்லன் பாத்திரத்துக்கு உங்களை டிக் அடிச்சது எப்படி? உடனே அதை ஏத்துக்கிட்டீங்களா?
“வில்லன் கேரக்டர்ல யாரை நடிக்க வைக்கலாம்னு பேச்சு போயிட்டு இருந்திருக்கு. படத்தோட டயலாக்ஸ் ரைட்டர் தமிழரசன் பச்சமுத்து என்னோட பெயரைச் சொல்லியிருக்கார். ‘கதையில இருந்த சுந்தரம் என்ற உயிருக்கு சரியான உருவம் சுரேஷ் சக்கரவர்த்தி’ன்னு சொல்லியிருக்கார். படத்தோட புரொடக்ஷன் மேனேஜர் சொக்கலிங்கம் எனக்கு கால் பண்ணினார். அருண்ராஜா காமராஜ் டைரக்ட் பண்றார்ன்னு சொன்னவுடனே ‘ஓகே’ சொல்லிட்டேன். படத்தோட கதையைக் கூட கேட்கல. ஆனா, இந்தியில படத்தைப் பார்த்திருங்கன்னு சொன்னாங்க. சரின்னு சொல்லிட்டு பார்த்தேன்.
படத்துல ஒரு கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த கேரக்டர்ல நடிச்சா நல்லாருக்கும்னு கேட்டேன். ‘இல்ல சார்’னு சொல்லிட்டாங்க. நான் கேட்ட கேரக்டரை இளவரசு பண்ணியிருந்தார். அப்புறம் எந்த கேரக்டர்னு கேட்டேன். வில்லன் கேரக்டரைச் சொன்னாங்க. ‘முடியாது’ன்னு சொல்லிட்டு போனை வெச்சிட்டேன். அதுக்கு அப்புறம் அவங்க போன் பண்ணியும் நான் எடுக்கவே இல்ல. எனக்கு பிடிக்காத விஷயங்களைச் சொல்லக்கூடிய கேரக்டர்தான் சுந்தரம். நான் அது இல்லன்னு சொல்லிட்டேன். ஆனா, ‘நான் அது இல்ல’ன்னு சொன்னதைத்தான் இயக்குநர் வசந்தபாலன் சாரும், எங்க அக்காவும் பண்ணச் சொன்னாங்க. ‘நடிப்புன்னா என்ன… இல்லாததை இருக்குற மாதிரி காட்டுறது’ன்னாங்க. சரின்னு நடிச்சேன்.
சுந்தரம் கேரக்டர் மாதிரியே நிறைய மனிதர்களை நிஜ வாழ்க்கையில் பார்த்திருக்கேன். இவங்க மத்தவங்களை எப்படிப் பார்ப்பாங்க, பேசுவாங்கங்கறது எல்லாம் அந்த கேரக்டர்ல நடிச்சப்போ மனசுக்குள்ள வந்துட்டு போனது.”
உதயநிதியோட நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது?
“இப்போ இருக்குற எல்லா ஹீரோஸூம் டவுன் டு தி எர்த் பெர்ஷனாதான் இருக்காங்க. எவ்வளவு உச்ச நட்சத்திரமா இருந்தாலும் நார்மலா இருக்காங்க. இதுல உதயநிதி சார் பெரிய நடிகர் மட்டுமில்ல பாரம்பரியமிக்க குடும்பத்துல இருந்து வந்தவர். பொறுப்பான பதவியில இருக்கார். இப்படியிருக்கும் பட்சத்தில் கெடுபிடி அதிகமா இருக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா, அப்படி எதுவுமில்ல. சாதராண சக நடிகர் மாதிரியே செட்டுல இருந்தார். ரொம்ப ஈஸியா அப்ரோச் பண்ற மாதிரியிருந்தார்.
அவருடைய சேப்பாக்கம் தொகுதில இறங்கி வேலைப் பார்த்தது, பாத்ரூம்குள்ள போனது எல்லாம் இந்தப் படத்துல நடிக்கறதுக்கு முன்னாடி பண்ணினார். அதேதான் இந்தப் படத்துலயும் பண்ணியிருப்பார். விஜயராகவன் கேரக்டர்ல ரொம்ப இன்வால் ஆகி நடிச்சார். அவர் நடிக்குறப்போ கண்ணைப் பார்த்து டயலாக்ஸ் பேச முடியாது. அந்தளவுக்கு அவர் பார்வை ஷார்ப்பா இருக்கும். டைரக்டர் கட் சொன்னவுடனே சிரிக்க ஆரம்பிச்சிருவேன். ‘ஏண்ணே சிரிப்பு காட்டுறீங்க’ன்னு கேட்பார். அந்தளவுக்கு ஆர்டிஸ்ட் ஆகிட்டார். ‘மனிதன்’ படத்துலயே ரொம்ப நல்லா நடிச்சிருப்பார். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த மாதிரி பெரிய இடத்துல இருந்து வர்றவங்க மேல விமர்சனங்கள் அதிகமா இருக்கும். ‘இவங்களுக்கு என்ன நடிப்பு தெரியும்’ன்னு கேட்பாங்க. படத்துல போலீஸ் டிரெஸ்ல பார்த்தப்போ சரியா பொருந்திப் போயிருந்தார். அதுக்கு கடுமையான உழைப்பு போட்டிருந்தார்.”
‘நீங்க சாதி மதம் பார்ப்பீங்க’ன்னு ஒரு பிம்பம் இருக்கறதை எப்படிப் பார்க்குறீங்க?
“நான் யார்ன்னு எனக்கு தெரியும். சின்ன வயசுல இருந்து சாதி இல்லன்னு வளர்ந்திருக்கோம். சமத்துவம் எப்போதும் வீட்டுல இருக்கும். வீட்டுல வேலை செய்யறவங்களைக்கூட பேர் சொல்லி கூப்பிடாம அண்ணான்னுதான் கூப்பிடுவோம். ‘வா’, ‘போ’ன்னு கூட பேச மாட்டோம். அது குழந்தையா இருந்தாக்கூட! நெருக்கமான சிலர்கிட்ட உரிமையில அப்படிப் பேசுனாகூட அக்கா திட்டுவாங்க. ரஜினி மற்றும் கமல் சார் சாதராண ஆட்களைகூட வாங்க, போங்கன்னுதான் கூப்பிடுவாங்க. அப்படி இருக்குறதுலாம் பெரிய விஷயம். அதனால எனக்கு சாதி கேட்குற பழக்கம்லாம் எப்போதும் கிடையாது.”