பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: இலக்கில் 50 சதவிகித வீடுகள்கூட கட்டி முடிக்கப்படவில்லை!

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின்கீழ் 1.21 கோடி வீடுகள் கட்டப்பட வேண்டும். ஆனால், இந்தத் திட்டத்தின்கீழ் இது 48.7 லட்சம் வீடுகளே கட்டி முடிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

இந்தத் திட்டமானது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்திருப்பதுடன், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தத் திட்டத்துக்கு ரூ.48,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா

இதுவரை வீடு இல்லாதவர்கள் புதிதாக வீடு கட்டுவதற்கு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியா முழுக்க 1.21 கோடி வீடுகள் கட்டப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இந்த மாதம் மே 17-ம் தேதி வரை 48.7 லட்சம் வீடுகளே முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 50 சதவிகிதத்தைவிட குறைவாகும்.

அது மட்டுமல்ல, கடந்த ஆண்டில் 20 லட்சம் வீடுகள்கூட கட்டிமுடிக்கவில்லை. 2018-19-ம் ஆண்டில் மட்டும் 18 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், 2019-20-ல் வெறும் 8.40 லட்சம் வீடுகளே கட்டப்பட்டன. கோவிட்-19 தொற்று நோய் வந்த பிறகு, இந்தத் திட்டத்தின் வீடு கட்டப்படுவது மிகவும் குறைந்துள்ளது.

இந்தத் திட்டப் பணியை இந்தியா முழுக்க உள்ள மாநிலங்களில் 11 மாநிலங்கள் மட்டும் 50 சதவிகிதத்துக்குமேல் முடித்துள்ளன. டெல்லி, கோவா, தெலங்கானா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் அதிக அளவில் திட்டப்பணியை முடித்துள்ளன.

வீடு

அதே சமயத்தில், ஒடிசா, ஜார்க்கண்ட், பஞ்சாப், அருணாசலப் பிரதேசம், மேற்கு வங்காளம், புதுச்சேரி, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் 40% அளவுக்கு திட்டப்பணிகளை செய்து முடித்துள்ளன. ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, பீகார் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 30% அளவுக்கு மட்டுமே இந்தத் திட்டப்பணியை முடித்துள்ளன.

இந்தத் திட்டப் பணிகள் இந்த வேகத்தில் நடக்கும் எனில், அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ள 1.20 கோடி வீடுகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்படுவதற்கு இன்னும் ஐந்து ஆண்டுக் காலம் என்கிறார்கள். மாநில அரசாங்கங்கள் இந்தத் திட்டப்பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் கோரிக்கையாக இருக்கிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.