பிரதமர் மோடி நேற்று சென்னை வந்திருந்த நிலையில், அவர் வந்த நேரத்தில் 3 கல்லூரி மாணவர்கள் ரயிலில் சந்தேகத்திற்கிடமான வகையில் பேசியுள்ளனர். இதனால் அவர்களிடம் காவல்துறையினர் சிறிது நேரம் விசாரணை நடத்தி அதற்குப்பின் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
பல்வேறு நலத்திட்டங்களை திறந்து வைப்பதற்காக நேற்று பிரதமர் மோடி சென்னை நேரு விளையாட்டரங்கத்திற்கு வருகை தந்திருந்தார். இதனால் பாதுகாப்புக்காக 22,000 போலீசார் பணியில் ஈடுபட்டனர். மேலும் ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று செகந்திராபாத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ரயிலில் 3 பேர், பிரதமர் மோடியின் சென்னை வருகை குறித்து சந்தேகத்திற்கிடமாக பேசி வந்ததாக சக பயணி ஒருவர் சமூகவலைதளம் மூலமாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… பூந்தமல்லி: கழன்று தொங்கும் பேனர்கள்; விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த அந்த 3 பேரை கியூ பிரிவு போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. விசாரணை நடத்தியதில் அவர்கள் எந்த பின்புலமும் இல்லாதவர்கள் என தெரிய வந்ததால், அவர்களை எச்சரித்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM