பூந்தமல்லியில் மீண்டும் பேனர் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. தற்போது காற்று, மழை என பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் நெடுஞ்சாலைகளில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் விளம்பர பதாகைகள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பல்வேறு பகுதிகளில் ராட்சத பேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி அவ்வப்போது விபத்து ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது பூந்தமல்லி அருகே ஒரு ராட்சத பேனர் பெயர்ந்து சூறாவளி காற்றில் அருகே உள்ள உயர்அழுத்த மின்சார கேபிளில் சுற்றி விபத்து ஏற்பட்டது. ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க எந்த ஒரு அதிகாரிகளும் ஈடுபடாத பட்சத்தில் புதிதாக ராட்சத விளம்பர பதாகைகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தொழிலாளர்கள் அந்தரத்தில் ஏரி பொருத்தி வருகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன் கருதி நெடுஞ்சாலைத் துறையினரும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் இணைந்து, பொருத்தப்பட்டுள்ள பேனர்களை அகற்றி புதிதாக பொருத்துவதற்கு தடை விதிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM