மும்பை: போதைப்பொருள் வைத்திருந்ததாக கைதான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை. அவர் அப்பாவி என போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவா சென்ற சுற்றுலா கப்பலில், நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன்கான் மற்றும் அவரது நண்பர்கள் போதை பொருட்களுடன் சில நாட்களுக்கு முன்னர் போதைப்பொருள் தடுப்பு போலீசிடம் சிக்கினர். 3 வாரங்களுக்கு மேல் சிறையில் இருந்த ஆர்யன் கான், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். பின்னர், நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போதைப்பொருள் தடுப்பு போலீசார் (என்சிபி) தாக்கல் செய்தது. அதில், அர்யன்கான் அப்பாவி எனக்கூறியுள்ளது.
இது தொடர்பாக என்சிபி உயர் அதிகாரி சஞ்சய் குமார் சிங் கூறியதாவது: ஆர்யன்கான் மற்றும் மொகக் என்பவர் தவிர மற்றவர்கள் அனைவரும் போதைப்பொருள் வைத்திருந்தனர். ஆர்யன்கானுக்கு எதிராக போதிய ஆதாரங்களை திரட்ட முடியவில்லை எனக்கூறினார்.
Advertisement