மும்பை: சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டார். இது குறித்து கேள்விகளுக்கு பதில் தர மறுத்து விலகிச் சென்றுள்ளார் ஆர்யனை கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே.
கடந்த 2021 அக்டோபர் 2-ம் தேதி, மும்பையில் இருந்து கோவாவுக்கு கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர்.
கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது, போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் அடிப்படையில் மொத்தம் 21 பேர் கைதாகினர்.
இதையடுத்து, ஆர்யன் கான் மும்பை ஆர்த்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யன் கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், ஆர்யன் உட்பட மூவருக்கு ஜாமீன் வழங்கியது. வெள்ளிக்கிழமைதோறும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும். நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய போதைப் பொருள் தடுப்பு ஆணையம், இந்த வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு உள்ள தொடர்பை உறுதிப்படுத்தவில்லை எனக் கூறி அவரை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணை ஆணையம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 180 நாட்கள் வரை அவகாசத்தை மீண்டும் மீண்டும் நீட்டித்து வழங்கினார். ஆனால் அதற்குள் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்ட எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்கவில்லை. இதனால் சந்தேகத்தின் பலனை வழங்கி ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்யன் கான் வழக்கமாக போதை மருந்து பயன்படுத்துபவர், விநியோகிப்பவர் என்று என்சிபி குற்றஞ்சாட்டி இருந்தது. ஆனால் ஏதுமே நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சமீர் வான்கடேவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் இப்போது என்சிபியில் இல்லை. எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது எனக் கூறிச் சென்றார்.
சமீர் பணத்துக்காக போலியாக வழக்குப் பதிவு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், சமீர் போலி சாதிச் சான்றிதழ் கொடுத்துள்ளார், போதைப் பொருள் வழக்கில் விசாரணையை முறையாக செய்யவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.