காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நான்கரை மணிநேரம் இரகசியமாக விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ம் திகதி மாலையே விசாரணை நடைபெற்ற போதிலும் விசேடமாக எதுவும் வெளியாகவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வசிக்கும் நுகேகொட விஜயராம மாவத்தையில் உள்ள வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினரே இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 9ம் திகதி காலி முகத்திடலில் அமைதிப் போராட்டத் தளம் குண்டர்களால் தாக்கப்பட்டமைக்கு முன்னர் அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டம் தொடர்பில் முன்னாள் பிரதமரிடம் நீண்ட நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெடித்த வன்முறை
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது அரசியல்வாதிகள் உள்ளிட்ட குண்டர்கள் குழுவினால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்ததுடன், அரசாங்க ஆதரவாளர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.
அத்துடன், இந்த வன்முறை சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன், 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
அத்துடன், அரசாங்க ஆதரவாளர்களை அழைத்து வந்ததாக கூறப்படும் பல பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.