பெங்களூரு: கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள மலாலியில் பழமையான ஜும்மா மசூதி உள்ளது. அங்கு அண்மையில் புணரமைப்பு பணிகள் மேற்கொண்டபோது இந்து கோயில் போன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனால் முஸ்லிம்கள் வசம் இருக்கும் இந்து கோயிலை மீட்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் மசூதியை புணரமைக்க தடை விதிக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். இதனிடையே விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மசூதிக்கு அருகிலுள்ள ராமாஞ்சநேய பஜனை மந்திராவில் நேற்று முன்தினம் கோபாலகிருஷ்ண பனிக்கர் தலைமையில் ‘தாம்பூல பூஜை’ நடத்தினர். இதனால் இந்து, முஸ்லிம் தரப்பினரிடையே பதற்றம் எழுந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த மங்களூரு மாநகர காவல் ஆணையர் சசிகுமார் மசூதியை பார்வையிட்டார். மசூதியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மக்கள்கூட தடை விதித்து, வரும் 27-ம் தேதி இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே தக்ஷின கன்னட மாவட்ட ஆட்சியர் கே.வி.ராஜேந்திரா, ”சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்த பிறகே இதுகுறித்து முடிவெடுக்க முடியும்” என்றார்.