சென்னை: கூட்டுறவு கூட்டாட்சி என்ற உணர்வுடன் அதிக திட்டங்களை தருவதுடன் தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டும் என சென்னையில் நடந்த விழாவில் பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கோரிக்கை விடுத்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த பிரம்மாண்ட விழாவில் மத்திய, மாநில அரசு துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வந்ததற்காக தமிழக மக்கள் சார்பிலும் முதல்வர் என்ற முறையிலும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழாவில் தொடங்கி வைக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் தமிழக வளர்ச்சிக்கு முக்கியமான திட்டங்கள்.
தமிழகம் பல்வேறு வகைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழக மக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியம். கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனிதவளம் என பல்வேறு துறைகளில் தமிழகம் தனது பங்களிப்பை அளித்து வருகிறது. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைவிட தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவம் மிக்கது. இந்த வளர்ச்சி வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. சமூக நீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தமிழகத்தின் வளர்ச்சி. இதைத்தான் நாங்கள் திராவிட மாடல் ஆட்சி என்று அழைக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியில் நிதி சமத்துவமின்மையை சரிப்படுத்தியுள்ளோம். மாநிலத்தின் நிதி நிலைமையை திருத்தி அமைத்துள்ளோம்.
நாட்டின் வளர்ச்சியிலும் மத்திய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழகம் மிக முக்கிய பங்களிப்பை தருகிறது என்பது பிரதமருக்கு தெரியும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பீட்டில் தமிழகத்தின் பங்கு 9.22 சதவீதம். மத்திய அரசின் வரி வருவாயில் 6 சதவீதம். மொத்த ஏற்றுமதியில் 8.4 சதவீதம். ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 சதவீதம். தோல்பொருள் ஏற்றுமதியில் 33 சதவீதம். ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து தமிழகத்துக்கு பகிர்ந்து அளிக்கப்படுவது 1.23 சதவீதம் மட்டுமே.
எனவே, தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்துக்கும் அளிக்கக்கூடிய பங்குக்கு ஏற்ப மத்திய அரசு திட்டங்களிலும் நிதியிலும் தன் பங்களிப்பை உயர்த்த வேண்டும். அதுதான் உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியாக அமையும். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்களிப்பும் மகத்தானது.
தேசிய நெடுஞ்சாலைகளுக்காக தமிழகத்தில் தற்போது ரூ.44,762 கோடி மதிப்புள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலை துறைக்கு மட்டும் தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.18,218 கோடி.
எனவே, சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் முனைப்பாக இருக்கிறோம். அதிக அளவிலான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும். நாம் இணைந்து நிறைவேற்றும் திட்டங்கள் தொடர்பாக இரண்டு முக்கிய கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் பயனாளிகளின் பங்களிப்பையும் முன்னிறுத்தி பல திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன. அந்த தொகையை பயனாளிகள் செலுத்த முடியாத சூழலில் மக்களுடன் நேரடி தொடர்புடைய மாநில அரசுகள்தான் பயனாளிகளின் பங்களிப்பையும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளது. இதனால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரிக்கிறது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் மத்திய அரசின் பங்கானது, திட்டம் முடிவடையும்வரை தொடர வேண்டும். பயனாளிகள் தங்கள் பங்களிப்பை செலுத்த முடியாதபோது மத்திய, மாநில அரசுகள் இணைந்து அதை சமமாக ஏற்க வேண்டும்.
தமிழகத்தின் கடலோர பகுதி மக்களின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை பிரதமருக்கு நினைவுபடுத்தகடமைப்பட்டுள்ளேன்.
கடந்த மே 15-ம் தேதி வரை தமிழகத்துக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத்தொகை ரூ.14,006 கோடியை விரைந்து வழங்க வேண்டும். பல்வேறு மாநிலங்களின் வருவாய் முழுமையாக சீரடையாமல் இருக்கும் சூழலில் ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை ஜூன் 2022-க்கு பின்னரும் குறைந்தபட்சம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தரவேண்டும்.
பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் உலக மொழிகளில் இன்றளவும் சீரோடும் சிறப்போடும் விளங்கும் தமிழ் மொழியை, இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதுகுறித்து சட்டம் நிறைவேற்றி மாநில ஆளுநருரின் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை விரைந்து வழங்க பிரதமரை தமிழக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகம் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. அது இந்தியாவின் வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் தொடர்ந்து பங்களிக்கும். எனவே, தமிழகத்துக்கு உங்களின் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன். கூட்டுறவு கூட்டாட்சி என்ற உணர்வுடன் தமிழகத்துக்கு அதிக திட்டங்களை தரவேண்டும். அதிக நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நவீன தமிழகத்தின் தந்தை என கருதப்படும் கருணாநிதியின் ஒரு மேற்கோளை குறிப்பிட விரும்புகிறேன். ‘உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்’. எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை எய்திட அனைவரும் இணைந்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.