மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலை திறப்பு நாளை நடைபெறவிருக்கிறது. அதற்கான இறுதிகட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கருணாநிதியின் முழு திரு உருவச்சிலை 16 அடியில் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாளை திறக்கப்படவுள்ளது. இதற்காக இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நாளை தமிழகம் வருகிறார். அவரது சிலையை திறந்து வைத்தபின்னர், சிறப்புரையாற்றுகிறார் குடியரசுத் துணை தலைவர்.
கடந்த வாரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அந்த இடத்தில் பொருத்தப்பட்டது. தொடர்ந்து விழா ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், நாளை அந்த விழா நடைபெற உள்ளதால், அதன் இறுதிகட்ட பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலை உள்ள இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இந்த பணிகளை ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க… “ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
சிலை திறப்பை தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர்கள் மற்றும் பிற சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM