மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இருவரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இந்த 6 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன்10-ம் தேதி நடக்கிறது. சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுககூட்டணிக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.
4 எம்எல்ஏக்களை கொண்டுள்ள பாஜகவும், 5 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் பாமகவும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளன.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக நேற்றுமுன்தினம் இரவு அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து இருவரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்ஸை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சி.வி.சண்முகம், 3 முறை எம்எல்ஏவாகவும் சட்டத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில், பழனிசாமியின் தேர்வாக சி.வி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.தர்மர், ராமநாதபுரம் மாவட்டச் செயலராக இருந்துள்ளார். தற்போது முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலராகவும், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராகவும் உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் தர்மர் உறுதியாக நின்றதாக கூறப்படுகிறது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரைப்படி, இவர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.