நடப்பாண்டு மே மாதத்தில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கோடை மழை சீரான இடைவெளியில் தொடர்ந்து பெய்தது. மேட்டூர் அணையில் ஏற்கெனவே 100 அடிக்கு மேல் நீர் தேங்கியிருந்த நிலையில், கோடை மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் அணையின் நீர் மட்டம் 117.92 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 8,464 கனஅடியாகவும் இருந்தது.
நீர் வரத்து அதிகரித்தால் நீர் மட்டம் நேற்று 118.09 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 90.45 டிஎம்சியாக உள்ளது. நேற்று இரவு 8 மணியில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட 2 அடி மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் கர்நாடக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிந்தால் திடீரென நீர் வரத்து அதிகரிக்கக்கூடும்.
இதனால் மேட்டூர் அனை எந்நேரமும் முழுக்கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. எனவே, வெள்ள அபாயம், நீர்வரத்து, நீர்மட்டத்தை கண்காணிக்க பொதுப்பணித்துறை சார்பில் உதவி பொறியாளர்கள் தலைமையில் 8 பேர் கொண்ட 3 அவசர கால குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக கடந்த 24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து விட்ட தண்ணீர் இன்று நண்பகல் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த விவசாயிகள் பூக்கள் மற்றும் நெல் மணிகளை ஆற்றில் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
இந்த நீரானது இன்று (27.05.2022) மாலை கல்லணைக்கு செல்லும். பின்னர் கல்லணையிலிருந்து 5 மணிக்கு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீர் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்கலுக்கு பாசனத்திற்காக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,
மேட்டூர் அணை நிரம்பியதால் அவசர கதியில் அணையை குறுவை பாசனத்திற்கென சொல்லி தண்ணீரை திறந்து விட்டிருக்கின்றனர். தண்ணீர் திறப்பில் அரசு முறையாக திட்டமிடவில்லை, தண்ணீர் வரத்தும், வேகமும் மிகவும் குறைவாகத்தான் இருக்கின்றது. அதேநேரம் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளும் தங்கள் நிலத்தினை செப்பனிட்டு குறுவை விவசாயத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
வழக்கமாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டால் 20-ம் தேதி கடைமடையை சென்றடையும், ஆனால் தற்போது முன் கூட்டியே திறந்திருப்பதால் ஜூன் மத்தியிலேயே கடைமடையை சென்றடையும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. மேட்டூரில் 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு தற்போது டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு காவிரியில் தண்ணீர் தவழ்ந்து வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று நண்பகல்தான் முக்கொம்புவை வந்தடைந்திருக்கின்றது ஓடையாக. முக்கொம்புவில் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டபோதும் இன்று மாலை 4 மணி வரை கல்லணையை வந்தடையவில்லை.
இந்த சூழலில் ஏற்கனவே தேங்கியிருக்கும் நீருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேட்டூரில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கால் நனைக்குமளவுக்கே கல்லணையை வந்தடைந்திருக்கின்றது. வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும்போது ஜூன் இறுதி வரை கடைமடையை சென்றடைய நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரும் பணியை அரசு அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கான இடர்பாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டும். மேலும் ஆட்சியர் உரம் போதுமான அளவு கையிருப்பில் இல்லை என்று கூறியுள்ள நிலையில் உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும்.
அரசு குறுவை பாசனத்திற்காக தண்ணீரை மே மாதத்திலேயே திறந்து விட்டு விட்டோம் என்று மார்த்தட்டிக்கொண்டிருப்பதை விட விவசாயிகளின் உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை களைந்தும், கால்வாய்களின் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்தும் கொடுத்தால் மட்டுமே குறுவை சாகுபடி நினைத்தமாதிரி ஜெயிக்கும் என்று கூறியுள்ளனர்.
இந் நிலையில் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஓடையாக கல்லணையை வந்தடைந்தது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு கல்லனையின் மதகுகளின் பொத்தானை அழுத்தி குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து விட்டனர்.
இந்நிகழ்ச்சியில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு)இ எம்.எச்.ஜவாஹிருல்லா (பாபநாசம்), சௌந்தரபாண்டியன் (லால்குடி), ஸ்டாலின் குமார் (துறையூர்), பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வேளாண்மை துறை இணை இயக்குநர் ஜஸ்டின் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர், அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆற்றில் நெல் மணிகள் மற்றும் மலர்கள் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 3.38 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்ததைத் தொடர்ந்து கல்லணையிலிருந்து இன்று மாலை டெல்டா மாவட்ட பாசனத்திற்காக முதல் கட்டமாக காவிரியில் 500 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 500 கன அடி, வெண்ணாறில் 500 கன அடி, புது ஆறு எனப்படும் கல்லணைக் கால்வாயில் 100 கன அடி என மொத்தம் 1600 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 1,11,150 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 93,860 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 19,760 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 86,450 ஏக்கர், அரியலூர் மாவட்டத்தில் 2,470 ஏக்கர் என மொத்தம் 3,38,390 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக மிகவும் குறைவாக, அதாவது வெறும் 1600 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
க.சண்முகவடிவேல். மற்றும் எஸ்.இர்ஷாத் அஹமது தஞ்சாவூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“