சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் 2 அடிமட்டுமே இருப்பதால், பொதுப்பணித்துறை சார்பில் அவசர காலகுழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்தால் 16 கண் மதகு வழியாக உபரி நீரை வெளியேற்றுவதற்கு பொதுப்பணித் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
நடப்பாண்டு மே மாதத்தில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கோடை மழை சீரான இடைவெளியில் தொடர்ந்து பெய்தது. மேட்டூர் அணையில் ஏற்கெனவே 100 அடிக்கு மேல் நீர் தேங்கியிருந்த நிலையில், கோடை மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் அணையின் நீர் மட்டம் 117.92 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 8,464 கனஅடியாகவும் இருந்தது. நீர் வரத்து அதிகரித்தால் நீர் மட்டம் நேற்று 118.09 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 90.45 டிஎம்சியாக உள்ளது. நேற்று இரவு 8 மணியில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட 2 அடி மட்டுமே எஞ்சி உள்ளது. திடீரென நீர் வரத்து அதிகரித்தால், எந்நேரமும் அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. எனவே, வெள்ள அபாயம், நீர்வரத்து, நீர்மட்டத்தை கண்காணிக்க பொதுப்பணித்துறை சார்பில் உதவி பொறியாளர்கள் தலைமையில் 8 பேர் கொண்ட 3 அவசர கால குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘நீர் வரத்து அதிகரித்தால் எந்நேரமும் மேட்டூர் அணை நிரம்பிவிடும்.
எனவே, வெள்ள அபாயத்தை 24 மணி நேரமும் தொடர்ந்து கவனித்து வருகிறோம். வெள்ளம் அதிகரித்தால், உடனடியாக 16 கண் மதகைதிறந்து உபரி நீரை, காவிரியில் வெளியேற்றவும் தயார் நிலையில் இருக்கிறோம்’ என்றனர்.
இதனிடையே, டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், அணையில் உள்ள நீர் மின் நிலையம் மூலமாக 50 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர் திறப்பு அதிகரிக்கும்போது, 250 மெகா வாட் வரை உற்பத்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.