’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!

ஐதராபாத்தில் பிரதமரின் நிகழ்ச்சியை தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தவிர்த்த நிலையில், பிரதமருக்கு 17 கேள்விகளை எழுப்பி பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னை வருவதற்கு முன்னதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடைபெற்ற இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லுரியின் 20-ம் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர் பேகம்பட் விமான நிலையத்தில் பா.ஜ. கட்சியினரிடம் பேசிய அவர், அம்மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவருமான சந்திர சேகர ராவை கடுமையாக விமர்சித்தார்.
இந்தியாவில், குடும்பக் கட்சிகளால் அரசியலில் பிரச்னைகள் உருவாகுவதாக தெரிவித்த அவர், ஜனநாயகத்திற்கும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் மிகப் பெரிய எதிரிகளாக குடும்பக் கட்சிகள் உள்ளன என்று பிரதமர் கூறினார். மேலும், வாரிசு அரசியலை ஊக்குவிப்போர், தங்கள் குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துவதாக கூறிய அவர், தெலுங்கானா மக்கள் இதை பார்த்துக் கொண்டு தான் இருப்பதாகவும், இந்த கட்சிகளுக்கு, ஏழை மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில், சிறிதளவும் அக்கறை கிடையாது என்றும் விமர்சித்தார்.
ஒரு குடும்பத்தின் ஆட்சியில், எத்தகைய ஊழல் நடந்தது என்பது, இந்த நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் எனவும், தெலுங்கானா பிரிவினை போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர் என்றும், அந்த தியாகம், தெலுங்கானா வளர்ச்சி குறித்த கனவுகளை சிதைக்கும், ஒரு குடும்பத்தின் ஆட்சியால் வீணாக விடக் கூடாது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
image
பிரதமர் வரும்போது அவரை வரவேற்க முதல்வர் செல்லவேண்டும் என்ற புரட்டோகால் உள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்க்கும் வகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் காலையிலேயே பெங்களூரு சென்றார். அங்கு, மதச் சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரை சந்தித்து தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் பேசினார். அடுத்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக, தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைப்பது தொடர்பாக, அவர் சமீபகாலமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
image
ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் 5-ம் தேதி, ஹைதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க வந்தர் பிரதமர் நரேந்திர மோடியை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உடல் நலனை காரணம் காட்டி வரவேற்க வரவில்லை. இதனால் இரண்டாவது முறையாக இவ்வாறு நடந்ததை அடுத்து விமர்சனம் எழுந்தது.
image
இந்நிலையில், தெலங்கானாவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு 17 கேள்விகள் எழுப்பி ஹைதராபாத் நகரம் முழுவதும் பேனர் வைக்கப்பட்டிருந்தது. மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்ட 17 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்சி இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
image
பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்க்கும் வகையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் பெங்களூரு சென்ற நிலையில், இந்த பேனர்கள் கூடுதல் கவனம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
image
image
image
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.