டோக்கியோ: ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜப்பானில் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உலகளவில் கரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஜப்பானும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை ஜப்பான் நீக்கியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறும்போது, “அடுத்த மாதம் 10-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு வழிகாட்டப்பட்ட விதிமுறைகளின்படி சுற்றுலா பயணிகளின் அனுமதி வழங்குகிறோம். இதனைத் தொடர்ந்து நியூ சிட்டோஸ் விமான நிலையத்திலும், ஒகினாவாவில் உள்ள நஹா விமான நிலையத்திலும் சர்வதேச விமானங்கள் ஜூன் மாதம் முதல் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். படிப்படியாக சுற்றுலா பயணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு சுற்றுலா வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும், பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டிருக்க போட்டிருக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானில் இதுவரை 83 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.