8 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசின் 8 தவறுகள் என தலைப்பில் விமர்சன ஆவணம் ஒன்றை வெளியிட்டது காங்கிரஸ்..!

டெல்லி: 8 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசின் 8 தவறுகள் என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி விமர்சன ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் அஜய் மாக்கன் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இந்த விமர்சன ஆவணத்தை டெல்லியில் வெளியிட்டனர். அதில்; பொருளாதாரம், அயலுறவுக்கொள்கை, மதநல்லிணக்கணம், நாட்டின் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது. வரலாறு காணாத பணவீக்கத்தை மூலம் சாமானிய மக்களின் வாழ்வில் மோடி அரசு விஷத்தை ஏற்றி இருக்கிறது. 2022 ஏப்ரல் நிலவரப்படி பணவீக்கம் 15.8%. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய பாதிப்பு. உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் மீதான விலையேற்றமும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. திறனும், ஆர்வமும் கொண்டுள்ள இந்திய இளைஞர்கள் இன்று வேலைவாய்ப்பின்மையால் நிர்க்கதியான சூழலில் சிக்கி இருக்கிறார்கள். தற்போது வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.9%ஆக உயர்ந்துள்ளது. மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்தனர். உள்நாட்டு உற்பத்தி முன் எப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 8.365 ஆக இருந்த ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் எட்டாண்டு கால மோடி ஆட்சியில் 4.75% ஆக வீழ்ச்சி அடைந்துவிட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் 77.81ஆக குறைந்துள்ளது. பிரதமரின் ஃபசல் பிமா யோஜனா திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை கொள்ளையடிக்க வழி வகுக்கிறது. மத அடிப்படையில் மக்களை இந்திய அரசு பிளவுப்படுத்துகிறது. மோடி ஆட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பு கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. பட்டியலின, பழங்குடியின, ஓபிசி பிரிவினரின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு தலித் முதலமைச்சர் கூட கிடையாது. எல்லையில் சீனப்படைகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதை மோடி அரசு மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி அந்த விமர்சன அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.