RR v RCB: பெங்களூரின் உயிர் பெற்றிடாத `ஈ சாலா' கோஷம்; ராஜஸ்தானின் பைனல்ஸ் கனவை நனவாக்கிய பட்லர்!

வேகப் பந்து வீச்சாளர்களின் எழுச்சியாலும், பட்லரின் வழக்கமான சரவெடியாலும், 13 சீசன்கள் கழித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். மறுபுறம் ஆர்சிபியோ வழக்கம்போல அனைத்துத் தவறுகளையும் செய்து தங்களது கோப்பைக் கனவை அடுத்த வருடத்திற்கும் நீட்டித்துள்ளது.

கோலியின் சதத்திற்காக மட்டுமல்ல, ஆர்சிபியின் கோப்பைக் கனவுக்கும் சுபம் போட முடியாமல் ரசிகர்களின் காத்திருப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களால் ஓங்கி ஒலித்த `ஹல்லா போல்’-லால், ஈனஸ்வரத்தில் கேட்காமலே போனது, `ஈ சாலா கப் நம்தே’ கோஷம்.

டாஸைத் தோற்பதில் டாக்ட்ரேட் பட்டம் வாங்கியுள்ள சாம்சன், அடிசனல் அட்வான்டேஜான அதனை இப்போட்டியில் அதிசயமாக வென்றார். இருப்பினும், “நாங்கள் பேட்டிங் செய்யவே விரும்பினோம்” என டு ப்ளெஸ்ஸி கூற, இரு அணிகளுக்குமே, கேட்டது கிடைத்திருந்தது. இருபக்கமும் மாற்றமில்லை என்பதும் எதிர்பார்த்ததே.

RR v RCB

‘டு ப்ளெஸ்ஸிக்கு லெஃப்ட் ஆர்ம் பேஸ் பௌலர், கோலிக்கு ஸ்பின்னர்’ என ஆர்சிபியின் முதுகெலும்புகளை உடைக்க பல வகைகளில் ராஜஸ்தான் திட்டம் தீட்டியிருந்தது. ஆனால், கோலியை வீழ்த்த பிரஷித்துக்கு அவரது பழைய பலவீனமே போதுமானதாக இருந்தது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்து நகர்ந்து கோலியின் பேட்டில் எட்ஜாகி கீப்பர் அல்லது ஸ்லிப் கேட்சாகி அவர் ஆட்டமிழக்கும் காட்சி மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. இந்தத் தொடர் முழுவதிலும் ராஜஸ்தானுக்கு எதிராக ஒற்றை இலக்கத்திலேயே கோலி ஆட்டமிழந்திருக்கிறார். முன்னதாக அதேபோல வீசப்பட்ட பந்தை, “வெல் லெஃப்ட்” என விட்டவர், மறுபடியும் அதனைச் செய்திருக்கலாம். அதேசமயம், வேகம், ஸ்விங்கோடு கூடிய பவுன்ஸ் பிரஷித்தை அபாயகரமானவராக ஆக்குகிறது.

பவர்பிளேவுக்குள் புதிதாக எதையும் சாம்சன் முயற்சி செய்யவில்லை. போல்ட்டுக்கும், ப்ரஷித்துக்கும் தலா மூன்று ஓவர்களைக் கொடுத்து ரன்குவிப்பைக் கட்டுப்படுத்தினார். அக்காரணத்தினால் பவர்பிளேயில் 46 ரன்களை மட்டுமே ஆர்சிபி அடித்திருந்ததே முதல் சறுக்கலானது. மிகச்சிறந்த ஃபீல்டரான பராக் வெறும் 13 ரன்களோடு இருந்த பட்டிதர் தந்த கேட்ச் வாய்ப்பை நழுவவிடாமல் இருந்திருந்தால் கௌரவமான ஸ்கோரை ஆர்சிபி எட்டியிருக்காது.

பவர்பிளேயில் மட்டுமல்ல பத்து ஓவர்கள் முடிவில்கூட 74 ரன்கள் என மோசமாகவே ஆர்சிபியின் ரன்ரேட் இருந்தது. தொடர்ந்து சஹால் – அஷ்வினைக் கொண்டு சுழலால் சாம்சன் சுருட்டுவார் என்று பார்த்தால் நடுநடுவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தலா ஒரு ஓவரைக் கொடுத்தார். அப்படித் தரப்பட்ட இரண்டு ஓவர்களிலும் இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததுதான் ஆர்சிபியைக் குழியில் தள்ளியது.

மெக்காய், டு ப்ளெஸ்ஸியை வெளியேற்றி இந்தக் கூட்டணியை உடைக்க, அவரது இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான பலவீனம் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது. அட்டாக்கிங் பேட்டிங்கிற்குப் பெயர் போன டு ப்ளெஸ்ஸி, இத்தொடரில் பெரும்பாலான போட்டிகளில் சொற்ப ரன்களோடோ, குறைவான ஸ்ட்ரைக்ரேட் உடனோ விடைபெற்று, ஓப்பனருக்கான இலக்கணத்திலிருந்தே தவறியுள்ளார். சுழலுக்கு நடுவே வேகம் எனும் ஃபார்முலா சாம்சனுக்கு மறுபடி கைகொடுத்தது. அவரது ஸ்பெல்லின் கடைசி ஓவரை போல்டை வீசவைக்க, 200 ஸ்ட்ரைக் ரேட்டோடு அதிவேகப் புயலாக மாறத் தொடங்கியிருந்த மேக்ஸ்வெல்லை அவரது பவுன்ஸர் வெளியேற்றியது.

RR v RCB

சீனியர் வீரர்கள் மூவருமே ஏமாற்றியிருந்தும் பட்டிதர் மட்டும் சென்ற போட்டியில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திருந்தார். அவரது பொறுப்பான ஆட்டமும் அரைசதமும்தான், கொஞ்சமேனும் ஆர்சிபியைக் கரையேற்றியிருந்தது. ஆனால், ‘ஒரு கேரம் பால் வெல்லும், ஒரு கேரம் பால் கொல்லும்’ என அஷ்வின் நிருபித்தார். தனது முதல் கேரம் பாலில் மிட் விக்கெட்டுக்கு மேலே சிக்ஸரைப் பறக்கவிட்ட பட்டிதரை அடுத்த பந்தையும் கேரம் பாலாக லெந்த்தை மாற்றி வீசி, பவுண்டரி லைனுக்கு அருகே கேட்ச் கொடுக்க வைத்து வெளியேற்றினார். மேக்ஸ்வெல் மற்றும் பட்டிதர் – இந்த இரு விக்கெட்டுகள்தான் போட்டியின் திருப்புமுனைகள்.

180 கூட சேஸ் செய்யக்கூடிய ஸ்கோர் என்பதால், இறுதி நான்கு ஓவர்களில் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்க வேண்டியது அவசியமாக, ராஜஸ்தானின் பலவீனமான டெத் பௌலிங், அதற்கு உதவும் என நம்பப்பட்டது. ஆனால், சுழல்பந்து வீச்சாளர்கள் செய்யத் தவறிய விஷயத்தை வேகப்பந்து வீச்சாளர்கள் செய்து முடித்தனர். லாம்ரோரின் விக்கெட்டோடு மெக்காய் அதிர்ச்சியளிக்க, அடுத்த ஓவரிலேயே பிரஷித், தினேஷ் கார்த்திக்கை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தாலும், ஹசரங்காவை அதிவேக யார்க்கராலும் வெளியேற்றி சகலத்தையும் முடித்தார்.

முதல் பத்து ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த ஆர்சிபி, அதற்கடுத்த பாதியில் ஏழு விக்கெட்டுகளை இழந்தது. பார்ட்னர்ஷிப்பே உருவாகவிடாமல் ராஜஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் அடித்து நொறுக்கினர். இறுதி நான்கு ஓவர்களில், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி 25 ரன்கள் மட்டுமே கொடுத்த இடத்திலேயே ராஜஸ்தான் போட்டியை பாதி வென்றுவிட்டது.

RR v RCB

பட்டிதரின் அரை சதத்தையும், மேக்ஸ்வெல்லின் கேமியோவையும் கழித்துப் பார்த்தால் ஆர்சிபியின் பேட்டிங் படை மொத்தமாகத் தோற்றிருந்தது. உபயம்: பிரஷித் + மெக்காயின் அதிஅற்புத ஸ்பெல்கள். ஆறாவது பௌலர்கூடத் தேவையில்லாதவாறு மெக்காயின் எதிர்பாராத எழுச்சி ராஜஸ்தானை முன்னிலைப்படுத்தியது. முக்கியப் போட்டியில் சவாலான இலக்கோடு மிரட்டாமல் விண்டேஜ் ஆர்சிபியாக மறுபடியும் சொதப்பியது டு ப்ளெஸ்ஸி அண்ட் கோ.

அதிக ஸ்கோரை சேஸ் செய்யும் போது அதிரடித் தொடக்கம் எப்படித் தேவையோ, அதேபோல் குறைந்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்யவும் விரைவான விக்கெட்டுகள் தேவை. பிட்சில் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்ஸை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக தொடக்கத்திலேயே ஹேசில்வுட்டுக்குக் கூடுதல் ஓவர்கள் கொடுக்கப்பட்டிருந்தால் அது அதிவிரைவான விக்கெட்டுகளுக்கு வழிசெய்திருக்கும். அங்கேயே கோட்டைவிட்டது ஆர்சிபி.

மறுபுறம், 158 என்பது எளிய இலக்குதான், மெதுவாக சேஸ் செய்வோம் என்று எண்ணாமல், ஆர்சிபியால் நிறுத்த முடியாத அச்சுறுத்தலாக இருந்தது பவர்பிளேயில் பட்லரின் படையெடுப்பு. மொத்த ஆர்சிபி கூடாரத்தின் தன்னம்பிக்கையையும் தூள் தூளாக்கி மனதளவில் பலவீனப்படுத்திவிட்டது அந்த ஆரவாரத் தொடக்கம். ஆறு ஓவர்களுக்கு உள்ளாகவே நான்கு பௌலர்களை முயன்று பார்க்க வைத்துவிட்டார் பட்லர். இந்த சீசனில் நடுவில் சின்னத் தடுமாற்றத்துக்குப் பின் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ள அவரது அதிரடி, இப்போட்டியிலும் தொடர்ந்தது. தேவைப்படும் ரன்ரேட்டுக்கு இருமடங்காகவே தற்போதைய ரன்ரேட் எகிறுவதை பட்லர் உறுதி செய்து கொண்டே இருந்தார்.பைன

RR v RCB

ஜெய்ஸ்வாலின் விக்கெட் மட்டுமே ஆர்சிபிக்கு ஆறுதல் அளிக்க, 6 ஓவர்களிலேயே 67 ரன்களோடு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி விட்டது ராஜஸ்தான். குறிப்பாக, சிராஜ் மற்றும் ஷபாஸ் வீசிய மொத்தம் 4 ஓவர்களில் வந்து சேர்ந்த 66 ரன்கள்தான் ஆர்சிபியின் இறுதிப் போட்டி கனவுக்கான பாதையில் பெரியதொரு தடையை உண்டாக்கியது.

கடைசி வாய்ப்பாக 11-வது ஓவரில், பட்லர் தந்த கேட்ச் வாய்ப்பையும் தவறவிட்டு தினேஷ் கார்த்திக் இந்த சீசனிலிருந்து ஆர்சிபி வெளியேறி விட்டதை அதிகாரபூர்வமாக உறுதி செய்தார். ராஜஸ்தானின் பேட்டிங் லைன் அப் பற்றி தெரிந்த கதைதான். பட்லரின் அந்த ஒரு விக்கெட் விழுந்திருக்கும் பட்சத்தில், அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்கு அதுவே வழிவகை ஏற்படுத்தி இருக்கும். ஆர்சிபியாலும் இறுதி ஓவர்களில் அழுத்தத்தை அதிகரித்திருக்க முடியும். இது நடக்காததால்தான் மொத்தமாக ஆர்சிபிக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஹசரங்காவின் பந்தில் நடுவில் விழுந்த சாம்சனின் விக்கெட் அவருக்கு 26-வது விக்கெட்டாகிவிட, சஹாலுடனான பர்ப்பிள் கேப் ரேஸில் அவரை முன்னிலைப்படுத்தியது மட்டுமே மிச்சம்.

RR v RCB

டெத் ஓவர்களுக்கு முன்னதாக, 12 – 15 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து, ஆர்சிபி கம்பேக் கொடுத்தாலும் ‘ரன் எ பால்’ கணக்கில் வந்து சேர வேண்டிய ரன்களும், கைவசமிருந்த 8 விக்கெட்டுகளும், அப்போதும் களத்தில் நின்ற பட்லரும் எல்லாமே முடிந்துபோய் விட்டதைச் சொல்லிவிட்டனர். ஹசரங்கா ஓவரில் லாங் ஆஃப்பில் அடித்த சிக்ஸரோடு மறுபடி வெளுக்க ஆரம்பித்த பட்லர், இந்த சீசனில் 800 ரன்களைக் கடந்தார்‌. இந்த சீசனில் தனது நான்காவது சதத்தையும் பதிவேற்றினார்.

இறுதியில் கடைசி ஓவர் வரை எல்லாம் எடுத்துச் செல்லாமல் 11 பந்துகள் எஞ்சியிருக்கும் போதே ஹர்சல் படேலின் பந்தில் அடித்த சிக்ஸரோடு அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் பட்லர்.

ஆர்சிபியின் கோப்பைக் கனவு அவர்களது மோசமான பேட்டிங்கால் மறுபடியும் தகர்ந்து போய் இருக்கிறது. தத்தித் தடுமாறி பிளேஆஃப்பில் நுழைந்தாலும், எலிமினேட்டரில் அவர்கள் விளையாடிய விதம் அவர்கள் மீதான நம்பிக்கையை பன்மடங்காக்கியது. ஆனால், இந்தப் போட்டியில் சாம்பியன் அணி ஆகத் தேவையான எந்தக் குணாதிசயங்களோடும் ஆர்சிபி ஆடவில்லை.

முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தானோ ஆண்டுக்கணக்காக இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்புக்காகக் காத்திருந்தது. இறுதியாக பட்லர் என்னும் அசைக்க முடியாத ஆளுமையால் அது நடந்தேறி இருக்கிறது. ஏலம் முடிந்த கையோடு ராஜஸ்தானின் நிர்வாகத் தரப்பிலிருந்து கூறப்பட்ட கருத்தில், “டாப் 2-ல் நாங்கள் முடிப்போம். இறுதிப் போட்டிக்கு முன்னேறி, கோப்பையையும் கைப்பற்றுவோம்” என்று கூறப்பட்டிருந்தது. அதில் இரண்டு விஷயங்கள் தற்சமயம் நடந்தேறியுள்ளன. இதன் மூலம், ஐபிஎல்-லில் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் முடித்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறியதேயில்லை என்னும் சாதனை இன்னமும் தொடர்கிறது.

RR v RCB

தற்சமயம் ராஜஸ்தானுக்கும் கோப்பைக்கும் நடுவில் நிற்பது குஜராத்தும், இன்னுமொரு வெற்றியும் மட்டுமே. அதையும் வீழ்த்தி, தனது இரண்டாவது கோப்பையை ஏந்தி, சொன்னபடி வார்னேவுக்கு அதைச் சமர்ப்பிப்பார்களா அல்லது தொடர்ந்து சர்ப்பிரைஸ் பேக்கேஜாக வலம் வரும் குஜராத், ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியனாக மகுடம் சூடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.