அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை ஆலோசனை பெறலாம்| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் இன்று 28ம் தேதி ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சி கோலாகலமாக துவங்குகிறது. இதில், ‘அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்’ வரை அனைத்து தேடல்களுக்கும் கல்வி ஆலோசனை பெறலாம்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., – ஐ.சி.எஸ்.இ., உள்பட அனைத்து வகை பாட திட்டத்திலும் பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான ஆலோசனை வழங்கும் நோக்கில், ‘தினமலர்’ நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் வழிகாட்டி கல்வித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான வழிகாட்டி கல்வித் திருவிழா, புதுச்சேரி சித்தன்குடியில், பாலாஜி தியேட்டர் பின்புறமுள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் இன்று 28ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கி மூன்று நாட்களுக்கு நடக்கிறது.

வரும் 30ம் தேதி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில், என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற கேள்விகளோடு காத்திருக்கும் மாணவர்களின் அனைத்து சந்தேகங்கள் மற்றும் உயர்கல்வி தொடர்பான தேடல்களுக்கும் ஒரே குடையின் கீழ் விடை கிடைக்கும்.இந்த மெகா கல்வித்திருவிழாவில், 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில், உயர்கல்வியின் பல்வேறு பாடப் பிரிவுகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மருத்துவம், இன்ஜினியரிங், கலை, சட்டம், வேளாண்மை, கணினி அறிவியல், வணிகம், மல்டி மீடியா என அனைத்து வகை பாடங்கள் குறித்தும், வல்லுனர்களின் ஆலோசனைகளை பெறலாம்.கைநிறைய சம்பளம் தரும் வேலைவாய்ப்புக்கான படிப்புகள் எவை; எதிர்கால வாழ்வை பிரகாசமாக்கும் பாட பிரிவுகள் என்ன; உயர்கல்வி படிக்கும்போதே, வளர்க்க வேண்டிய திறன்கள்; கல்லுாரிகளை தேர்வு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து, நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர். வங்கிகளில் கல்வி கடன் பெறும் முறை குறித்தும், தெரிந்து கொள்ளலாம்.

கல்லுாரி அரங்குகள்


நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி ஆலோசனை நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஒவ்வொரு கல்லுாரிக்கும் நேரில் சென்று பெற வேண்டிய தகவல்களை, ஒரே வளாகத்தில் அமைந்துள்ள அரங்குகளில் நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு அரங்கிலும், உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்தில் நடத்தப்படும் பாடப்பிரிவுகள், அதற்கான வேலைவாய்ப்புகள், விண்ணப்பங்கள், கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடைமுறை உள்ளிட்டவை குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.


நுழைவுத் தேர்வு

‘நீட்’ மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், ‘கிளாட்’, ‘நாட்டா’, ‘கேட்’போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியை ‘தினமலர்’ நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், பிக் எப்.எம்.,-92.7, எஸ்.மீடியா, அக்குவா கிரீன் இணைந்து வழங்குகின்றன. ‘அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்’ வரை அனைத்து தகவல்களையும் அள்ளித் தரும் ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பினை மிஸ் பண்ணாதீங்க……..

இன்றைய சிறப்பு அமர்வில் கல்வியாளர்கள்காலையில் நடக்கும் சிறப்பு அமர்வில் விண்வெளி அறிவியல் குறித்து இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அனிமேஷன் மல்டி மீடியா பற்றி பாபு ஷாஜன் கெவின், நுழைவு தேர்வுகள் மற்றும் ஸ்காலர்ஷிப் குறித்து நெடுஞ்செழியன் விளக்கம் அளிக்கின்றனர்.

மாலையில் நடக்கும் சிறப்பு அமர்வில் எதிர்கால சிறந்த படிப்புகள் குறித்து விவேக்ராம்குமார், ஐ.டி.சி.எஸ்., மற்றும் ஐ.ஓ.டி,, குறித்து பால்ராஜ், சிவில் சர்வீஸ் குறித்து புதுச்சேரி அரசின் தொழில் துறை செயலர் அருண் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கின்றனர்.வேலைவாய்ப்பை எளிதாக்கும் முன்னணி துறைகள், படிக்கும் போதே மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் கல்வியாளர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.

காத்திருக்கும் பரிசுகள்

காலை மற்றும் மாலையில் உயர்கல்வி நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்போரில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, லேப்டாப், டேப்லெட் மற்றும் வாட்ச் பரிசாக வழங்கப்படும்.உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை தொடர்ந்து பெற, www.kalvimalar.com என்ற இணையதளத்திலும், 91505 74441 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், தங்களின் பெயர் மற்றும் மாவட்ட விபரங்களுடன், மாணவர்கள் பதிவு செய்யலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.