புதுடில்லி : லடாக்கில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏழு வீரர்கள் உயிரிழந்தனர்.லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள பர்தாபூர் என்ற இடத்தில் இருந்து ஹனீப் என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு நேற்று ராணுவ வீரர்கள் லாரியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த லாரியில், 26 வீரர்கள் பயணித்தனர். காலை 9:00 மணிக்கு, துக்துக் என்ற இடத்தில் சென்ற போது, ஷயோக் ஆற்றில் லாரி கவிழ்ந்தது. 60 அடி ஆழத்தில் லாரி விழுந்தது. பலத்த காயம் அடைந்த நிலையில் வீரர்கள் மீட்கப்பட்டு, பர்தாபூர் முகாமில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, ஏழு வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வீரர்கள் ஹெலிகாப்டர் வாயிலாக சண்டிகர் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் உயிரிழந்தது கடும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து ராணுவ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement