உதவிப் பொருட்களை தந்துவிட்டு கச்சதீவை மீட்க இதுவே தருணம் என தமிழக முதல்வர் கூறியது மனவேதனையைத் தருகிறது என்று யாழ் மாவட்ட மீனவ சமாசத்தின் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கைக்கு உதவிப் பொருட்களை அனுப்பி விட்டு கடந்த 26-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே தருணம் என கூறியமை வடக்கு மீனவர் சமூகத்தைச் சேர்ந்த எமக்கு மிகவும் மன வேதனை தருவதாக யாழ் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்ன ராசா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் “எமது தொப்புள்கொடி உறவு என அடிக்கடி எமது தமிழ்நாடு மக்களையே கூறி வருகிறோம். இலங்கையில் பெரிய பொருளாதார பிரச்சினை காணப்படுமிடத்து தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம். ஆனால் உதவிப் பொருட்கள் நமது கைகளுக்கு வந்து கிடைக்கும் முன்னரே, கச்சதீவை முடிப்பதற்கு இதுவே தருணம் என தமிழக முதலமச்சர் கூறியது வடபகுதியில் உள்ள 50 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் மத்தியில் மனவேதனையை உண்டு பண்ணியுள்ளது.
நாம் 30 வருட கால யுத்தத்தில் தலனா துயரங்களை சந்தித்து தற்போது பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறான நிலையில் நாம் நமது தொப்புள்கொடி உறவு எனக் கூறும் தமிழக முதலமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தது நமக்கு மிகவும் கவலை அளிப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM