டேராடூன் : தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் விரக்தி அடைந்த உத்தரகண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா, 59, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா. இவர், காங்கிரசைச் சேர்ந்த என்.டி.திவாரி முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.சமீபத்தில் இவரது மருமகள் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்தார். சொந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ராஜேந்திர பகுகுணா மீது புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் மீது உத்தரகண்ட் போலீசார், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதனால் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த பகுகுணா, 25ம் தேதி, உத்தரகண்டில் உள்ள தன் சொந்த ஊரான ஹல்ட்வானியில் போலீசாருக்கு போன் செய்தார். அவர்களிடம், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார், அவரது வீட்டுக்கு வந்தனர்.
அதற்கு முன்பே, வீட்டுக்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் ஏறி நின்ற பகுகுணா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். போலீசார், அவரை சமாதானப்படுத்த முயன்றனர். இதையடுத்து கீழே இறங்க முயன்ற அவர், பின் மீண்டும் மேலே ஏறினார். அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கியால் மார்பில் தன்னைத் தானே சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement