பொருளாதார வல்லுனர்களின் பெரும் எதிர்ப்புக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் எல்ஐசி ஐபிஓ பங்குகள் பட்டியலிடப்பட்டது.
இந்த நிலையில் எல்.ஐ.சி. பங்குகளை வாங்கினால் மிகப்பெரிய லாபத்தை அடையலாம் என்று மத்திய அரசால் விளம்பரம் செய்யப்பட்டது.
ஆனால் எல்.ஐ.சி. பங்கை வாங்கிய முதலீட்டாளர்கள் எல்ஐசி பங்கு பட்டியலிடப்பட்ட முதல் நாளே கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
எல்.ஐ.சி ஐபிஓ
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ கடந்த மே 4ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை விற்பனை நடைபெற்றது.
எல்.ஐ.சி பங்கின் விலை
902 ரூபாய் முதல் 949 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட எல்.ஐ.சி பங்குகளை, எல்ஐசி ஊழியர்கள், எல்ஐசி பாலிசி பாலிசிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் என போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள். எல்.ஐ.சி பங்கில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.
ரூ.20,000 கோடி
மொத்தம் 36.6 கோடி பங்குகள் விற்கப்பட்டதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்ட நிலையில் கடந்த 12ஆம் தேதி பங்குச்சந்தையில் எல்.ஐ.சி பங்குகள் பட்டியலிடப்பட்டது. பட்டியல் ஆன முதல் நாளிலேயே 8 சதவீதம் குறைந்து ரூபாய் 867 என்ற விலையில் எல்.ஐ.சி பங்குகள் விற்பனை ஆனதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏமாற்றம்
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி புள்ளிகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் எல்ஐசி பங்குகள் மற்றும் உயராமல் இருந்தது. அதுமட்டுமின்றி படிப்படியாக மேலும் இறங்கியது. இதனால் அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.
நஷ்டம்
இந்த நிலையில் தற்போதைய மதிப்பீட்டின்படி எல்ஐசியின் முதலீடு செய்தவர்களுக்கு 80 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த பங்கு பட்டியலிடப்பட்ட தேதியில் இருந்து சுமார் 42,000 கோடி மூலதனத்தை இழந்துள்ளதாகவும் அதற்கு முன்பே 38 ஆயிரம் கோடியை இழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய மதிப்பு
நேற்றைய பங்குச்சந்தை முடிவுக்குப் பின்னர் எல்ஐசியின் பங்கு ரூபாய் 821.55 என்ற விலையில் முடிவடைந்தது. இதனால் ஒரு பங்கை வாங்கியவர்களுக்கு சுமார் 120 ரூபாய் நஷ்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்கள் குழப்பம்
பெரும் எதிர்பார்ப்புடன் எல்ஐசியில் முதலீடு செய்தவர்கள் தற்போது குழப்பத்தில் உள்ளனர். ஆனந்த் சீனிவாசன் உள்ளிட்ட பொருளாதார வல்லுநர்கள் எல்ஐசி பங்குகளை உடனே விற்றுவிட்டு குறைந்த நஷ்டத்துடன் வெளியேறி விடுங்கள் என்று கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ எல்ஐசி பங்குகளை வைத்திருந்தால் நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபத்தை பெறலாம் என்று கூறி வருகின்றனர். இதனையடுத்து எல்.ஐ.சி பங்குகளை வாங்கியவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
LIC’s Market Valuation Falls Over Rs 80,000 Crore From Issue
LIC’s Market Valuation Falls Over Rs 80,000 Crore From Issue | எல்.ஐ.சி பங்குகள் வாங்கியவர்கள் தலையில் துண்டு: ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு